


சுங்கை பட்டாணி,அக்.4 –
முனைவர் சின்னையா – ஜோபினா நாயுடு தம்பதியரின் பேரதரவில் எளியோருக்கு மருத்துவ உதவிகள் வழங்கி நெகிழ்ச்சி
சுங்கை பட்டாணியில் நடைபெற்றது.
தமிழ்த் திரையுலகின் நடிப்புச் சக்கரவர்த்தி ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசனின் புகழ்பாடும் “சிவாஜி ஒரு சகாப்தம் 6.0” கலைவிழா, கெடா மாநிலத்தின் வரலாற்று சிறப்புமிக்க கடார மண்ணில் பேரார்வத்துடன் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
அடிப்படை நடிப்புக் கல்லூரி என்றொன்று இல்லாத காலத்தில், தமது கம்பீரமான குரலாலும், முகபாவனைகளாலும், அசாத்திய உடல் மொழியாலும் தமிழ் சினிமாவின் இலக்கணத்தையே மாற்றி அமைத்தவர் சிவாஜி கணேசன். 1952-இல் ‘பராசக்தி’யில் தொடங்கிய அவரது கலைப்பயணம், 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் வரலாற்று நாயகர்களையும், காவியக் கதாபாத்திரங்களையும் கண்முன்னே நிறுத்தியது. அப்படிப்பட்ட ஒரு வரலாற்று நாயகனுக்கு விழா எடுத்து சிறப்பு சேர்த்துள்ளது ‘கடார சிவாஜி கலாச்சார இயக்கம் அதன் தலைவர் முனைவர் இரா.இலட்சப்பிரபு தயாரித்து வழங்கிய இந்த கலைப்பிரமாண்டம் வருகையாளர்களை கட்டி உழுத்தது.
சிங்கப்பூர் தொழிலதிபரும், கடார மண்ணில் தொடர்ந்து சமூகவியல் சேவைகளை முன்னெடுத்து வரும் சமூக ஆர்வலருமான டாக்டர் சின்னையா மற்றும் அவரது துணைவியார் டாக்டர் ஜோபினா நாயுடு ஆகியோரின் பேரதரவோடும் வழிகாட்டுதலோடும் இந்நிகழ்ச்சி கோலாகலமாகத் திட்டமிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, வெறும் கலைநிகழ்ச்சியோடு நின்றுவிடாமல் சமூக நலப்பணிகளுக்கும் முக்கியத்துவம் தரப்பட்டது. கடுமையான சுகாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு, வீட்டில் படுத்த படுக்கையாக அவதிப்படும் நோயாளிகளின் பயன்பாட்டிற்காகப் பல்வேறு சுகாதார உதவிப் பொருட்கள் விழா மேடையில் வழங்கப்பட்டுப் பெருமிதம் சேர்க்கப்பட்டது. கருத்து தெரிவித்த டாக்டர் சின்னையா, “கலையும் சமூகச் சேவையும் ஒன்று சேரும்போது தான் அது உண்மையான மக்கள் விழாவாக மாறுகிறது. ஏழை எளியோரின் துயர் துடைக்கும் இதுபோன்ற உன்னதமான சமூகச் சேவை நிகழ்ச்சிகள் மலேசியா நாடு முழுதும் தொடர வேண்டும எனக் கோரிக்கை விடுத்தார்.
அரங்கத்தை அதிரவைத்த சிவாஜியின் பாடல்கள் மகிழ்ச்சியூட்டியது.
மலேசிய இந்திய மக்கள் கட்சியின் ஆதரவுன் இணைந்துக்கொண்ட நிகழ்ச்சி மற்றும் இரா.இலட்சப்பிரபுவின் பிரமாண்டத் தயாரிப்பில் அரங்கேறிய இந்நிகழ்ச்சியில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட கலைப் பிரியர்களும் சிவாஜியின் தீவிர ரசிகர்களும் திரண்டு வந்து அரங்கத்தை நிறைத்தனர்.
மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தேசியத் தலைவர் திரு. ப.புனிதன் மற்றும் நாட்டின் முக்கியப் பிரமுகர்கள் பலர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். விழாவில் நடிகர் திலகத்தின் காலத்தால் அழியாத அரிய திரைப்படப் பாடல்கள் ஒவ்வொன்றாக இசைக்கப்பட்டபோது, ரசிகர்கள் கரவொலி எழுப்பி, பழைய நினைவுகளில் மூழ்கித் திளைத்தனர்.
கலைரசனைக்கும் சமூகச் சேவைக்கும் பாலமாக அமைந்த “சிவாஜி ஒரு சகாப்தம் 6.0” நிகழ்வு, கடாரத்து மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துப் பெருவெற்றி பெற்றுள்ளது.

