ஐ-சிட் மூலம் இரு புதிய முடிதிருத்தும் நாற்காலிகள்; பத்மாவதியின் தொழிலுக்கு புதிய உத்வேகம்

பண்டமரான், அக். 4 கடந்த 36 ஆண்டுகளாக முடிதிருத்தும் தொழிலை மேற்கொண்டு வரும் பத்மாவதி P. R. ராக்கியா, தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த வசதியை வழங்கும் வாய்ப்பைத் தற்போது பெற்றுள்ளார்.

சிலாங்கூர் மாநில இந்திய தொழில்முனைவோருக்கான ஐ-சிட் (i-SEED) உபகரண உதவித் திட்டத்தின் கீழ் அவருக்கு இரு புதிய முடிதிருத்தும் நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன.

பத்மாவதி P. R. ராக்கியா
பண்டமரானில் நடைபெற்ற உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில், சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு தலைமையில் பத்மாவதிக்கு அந்த புதிய நாற்காலிகள் வழங்கப்பட்டன.

36 ஆண்டுகளாக முடிதிருத்தும் கடையை நடத்தி வரும் பத்மாவதி, இதற்கு முன்பு பயன்படுத்தி வந்த நாற்காலிகள் மிகவும் பழமையானதுடன், அவற்றின் நிலையும் திருப்திகரமாக இல்லாததாக தெரிவித்தார்.

அதேவேளை, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக புதிய உபகரணங்களின் தேவை ஏற்பட்டது.

தனது விண்ணப்பத்தை அங்கீகரித்து, தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கிய சிலாங்கூர் அரசுக்கு பத்மாவதி தனது நன்றியைத் தெரிவித்தார்.

இதனிடையே, i-SEED திட்டத்தின் மூலம் வழங்கப்படும் உதவிகள், இந்திய சமூகத் தொழில்முனைவோருக்கு, உதவுவதில் சிலாங்கூர் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகப் பாப்பாராய்டு சுட்டிக்காட்டினார்.

“சிலாங்கூர் மாநில அரசு மக்களுக்கு உதவும் முயற்சியில் யாரும் புறக்கணிக்கப்படுவதில்லை. இந்த உதவிகள் வழங்கப்படுவது அதற்கான ஓர் சான்றாகும்,” என்றார்.

ஐ-சிட் மூலம் இந்திய தொழில்முனைவோருக்கு ஆதரவு

இதனிடையே, i-SEED திட்டத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மாதவன் முனியாண்டி, குறைந்த வருமானம் மற்றும் B40 பிரிவைச் சேர்ந்த இந்திய தொழில்முனைவோரின் வளர்ச்சியை மேம்படுத்த சிலாங்கூர் அரசால் 2021ஆம் ஆண்டு ஐ-சிட் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

மாதவன் முனியாண்டி
சிறு தொழிலைத் தொடங்க விரும்புவோர் அல்லது ஏற்கனவே நடத்தி வரும் தொழிலை விரிவுபடுத்த விரும்புவோருக்கு, அவர்களின் தொழில் தேவைக்கு ஏற்ற உபகரணங்களை வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்திற்கு மாநில அரசு ஆண்டுதோறும் தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்து வருவது வரவேற்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், எதிர்காலத்தில் பயனாளிகள் மேற்கொள்ளும் தொழில்களின் தன்மைக்கு ஏற்ப பல்வேறு வகையான உபகரணங்களை வழங்கும் வகையில் ஐ-சிட் திட்டத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகளும் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

விண்ணப்பிக்கும் நடைமுறை

தற்போதைய நிலையில் ஐ-சிட் திட்டத்துக்கான விண்ணப்பங்களை இந்திய சமூகத் தலைவர்கள் வாயிலாக சமர்ப்பிக்கலாம். பின்னர் அவை சம்பந்தப்பட்ட தரப்பினரின் பரிசீலனைக்கு கொண்டு செல்லப்படும்.

எதிர்காலத்தில் இணையவழி விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக மாதவன் தெரிவித்தார். எனினும், அதற்கான நடைமுறை இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

இத்திட்டம் தொடர்பான கூடுதல் தகவல்களை இந்திய சமூகத் தலைவர்கள் அல்லது சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அலுவலகம் மூலம் பெறலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles