செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியர்கள் தங்களது ஆற்றலை வளர்த்துக் கொள்ள டிஜிட்டல் அமைச்சு பாடுபடும்! அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவிப்பு

டமான்சாரா, அக் 4- இந்திய சமூகத்தினர் செயற்கை நுண்ணறிவு துறையில் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுப்பேன் என மலேசிய இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்துள்ளார்.

டாமான்சாரா நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த இந்தியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு கருத்தரங்கை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்து உரையாற்றினார்.

டாமான்சாரா நாடாளுமன்றத் தொகுதியில் நடைபெற்ற இந்த மடானி செயற்கை நுண்ணறிவு பயிலரங்கில், 16 வயதுக்கு மேற்பட்ட 75 இந்தியர்கள் பங்கேற்று பயனடைந்தனர். மித்ராவின் நிதியுதவியுடன் டாமான்சாரா நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் இந்தப் பயிலரங்கை ஏற்பாடு செய்திருந்தது.

உலகம் இலக்கவியல் தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வரும் நிலையில், இந்திய சமூகத்தினர் செயற்கை நுண்ணறிவு துறையில் பின்தங்காமல் இருப்பதை உறுதி செய்ய இதுபோன்ற பயிலரங்குகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.

மடானி அரசாங்கத்தின் கீழ் செயற்கை நுண்ணறிவு தொடர்பான திறன் மேம்பாட்டை ஊக்குவிப்பது குறித்து பிரதமரிடம் தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவு பயிற்றுநர் டாக்டர் யோகேஸ்வரி இந்தப் பயிலரங்கை வழிநடத்தினார். அவருடன் மேலும் சில இந்திய பயிற்றுநர்களையும் இணைத்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை டாமான்சாரா நாடாளுமன்றம் தொடர்ந்து நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய சூழலில் இலக்கவியல் தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவுத் திறனும் அனைவருக்கும் அவசியமானதாக மாறியுள்ளதாக கோபிந்த் சிங் டியோ குறிப்பிட்டார். தொழில்நுட்ப வளர்ச்சி வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தியர்கள் செயற்கை நுண்ணறிவு துறையில் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்வது காலத்தின் கட்டாயம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்தப் பயிலரங்கு, இந்திய சமூகத்தினரிடையே செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வையும் திறன் மேம்பாட்டையும் ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டது. இந்த முயற்சிகள் வரும் காலங்களிலும் தொடரும் என்றும், ஆர்வமுள்ளவர்களை ஊக்குவிக்கவும் அவர்களுக்கு தேவையான ஆதரவை வழங்கவும் தாம் தொடர்ந்து துணை நிற்பதாகவும் கோபிந்த் சிங் டியோ உறுதியளித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles