
ஷா ஆலாம், அக். 29-
குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு உதவிகளை விரிவுபடுத்துவதுடன், திறன் பயிற்சிகள் மற்றும் வேலைவாய்ப்புகளை அதிகரிக்க சிலாங்கூரின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வறுமை ஒழிப்புக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்.
இதனை மாநில மனிதவளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பராய்டு வலியுறுத்தியுள்ளார்.
வறுமையிலிருந்து விடுபட்டு, தங்களது வருமானத்தை உயர்த்திக்கொள்ள விரும்பும் மக்களுக்கு உதவுவதற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு அவசியம் என அவர் தெரிவித்தார்.
“வறுமை ஒழிப்புக்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என நம்புகிறோம். இதன் மூலம் உதவி தேவைப்படும் மேலும் பலர் பயனடைய முடியும். நிதியுதவி வழங்குவதுடன் மட்டும் நின்றுவிடாமல், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகளையும் உருவாக்க வேண்டும்,” என அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
இத்தகைய முயற்சிகளில், சிலாங்கூர் இந்தியத் தொழில்முனைவோருக்கான உபகரண உதவித் திட்டமான I-SEED மற்றும் புளூபிரிண்ட் (Blueprint) திட்டம் ஆகியவற்றை மேலும் வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இத்திட்டங்கள் மூலம் பயனாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப தொழில் உபகரணங்கள் மற்றும் பொருளாதார ஆதரவை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
அதேவேளையில், மக்களின் வேலைவாய்ப்புத் தகுதியை மேம்படுத்தும் நோக்கில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்விப் பயிற்சித் திட்டமான TVET, அத்துடன் JobCare வேலைவாய்ப்பு உதவித் திட்டம் ஆகியவற்றையும் விரிவுபடுத்த வேண்டும் எனப் பாப்பாராய்டு தெரிவித்தார்.
குறிப்பாக, விண்வெளி மற்றும் வானூர்தித் தொழில்துறை (Aerospace) போன்ற உயர்திறன் தேவைப்படும் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்கான பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றார்.
“வறுமை ஒழிப்பு என்பது உதவிகளை மட்டும் வழங்குவதன் மூலம் சாத்தியமாகாது. மக்கள் தேவையான திறன்களைப் பெறவும், வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவும், நீண்டகால அடிப்படையில் நிலையான வருமானத்தை உருவாக்கிக்கொள்ளவும் நாம் உதவ வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
இதற்கிடையில், அடுத்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் RM200 மதிப்பிலான தீபாவளி பற்றுச்சீட்டின் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் பாப்பாராய்டு வேண்டுகோள் விடுத்தார். எனினும், இந்த உயர்வு மாநில அரசின் நிதி நிலைமைக்கு உட்பட்டதாக இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
இவ்வாண்டு தீபாவளி பற்றுச்சீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக RM5.4 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தலா RM200 மதிப்பிலான சுமார் 24,000 பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

