
ஷா ஆலாம், அக். 29
சிலாங்கூர் மாநில அளவிலான தீபாவளிக் கொண்டாட்டம் எதிர்வரும் நவம்பர் 6-ஆம் தேதி டத்தாரான் கிள்ளான் @ பாடாங் செட்டி மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
‘ஒற்றுமையின் ஒளி, வளமான சிலாங்கூர்’ (Cahaya Perpaduan, Selangor Sejahtera) என்ற கருப்பொருளில் இக்கொண்டாட்டம், இரவு 7.30 மணி முதல் 11.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இந்நிகழ்ச்சியில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி உள்ளிட்ட மாநிலத் தலைவர்களும் அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பல இன மக்களும் ஒன்றிணைந்து தீபாவளியின் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மனிதவளத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பராய்டு தெரிவித்தார்.
இந்தக் கொண்டாட்டத்தில் இந்தியச் சமூகத்தின் பாரம்பரிய மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், பொதுமக்களுக்கான விருந்து உபசரிப்பு, அத்துடன் தீபாவளியை முன்னிட்டு வருகை தரும் மக்களுக்கு, குறிப்பாகச் சிறுவர்களுக்குப் பண அன்பளிப்புகள் வழங்கும் நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாப்பாராய்டு, தீபாவளியின் மகிழ்ச்சியைப் பெரியவர்கள் மட்டுமின்றி சிறுவர்களும் முழுமையாக அனுபவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இத்தகைய கொண்டாட்டங்களின் முக்கிய நோக்கம், மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்வதுடன், பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களிடையே நல்லுறவையும் ஒற்றுமையையும் மேலும் வலுப்படுத்துவதாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், சிலாங்கூரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் மாநில அளவிலான தீபாவளிக் கொண்டாட்டம், இந்து மக்களின் சமய மற்றும் கலாச்சார விழாவைக் கொண்டாடுவதுடன் மட்டும் நின்றுவிடாமல், மாநிலத்தில் நிலவும் இன, மொழி, கலாச்சாரப் பன்முகத்தன்மையை மதித்து, சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் முக்கிய தளமாகவும் விளங்குகிறது.
இவ்வாண்டின் கருப்பொருள், தீபாவளியின் ஒளியை ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக முன்னிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கி, அமைதியும் வளமும் நிறைந்த மாநிலமாக சிலாங்கூரை உருவாக்குவதற்கான விருப்பத்தையும் இந்தக் கருப்பொருள் பிரதிபலிப்பதாகப் பாப்பாராய்டு விளக்கினார்.

