இந்தோனேசியா–சிங்கப்பூர் எரிவாயு விவகாரம்; சொந்த எரிசக்தி வளங்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோஸ்ரீ ஜெயந்திரன்

கோலாலம்பூர், அக் 29-
இந்தோனேசியா, சிங்கப்பூருக்கான இயற்கை எரிவாயு ஏற்றுமதியைக் குறைத்துள்ள சம்பவம், மலேசியாவுக்கு முக்கியமான பாடமாக அமைந்துள்ளது.

எதிர்கால எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், மலேசியா தனது சொந்த இயற்கை வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதுடன், உள்நாட்டு எரிசக்தி கட்டமைப்புகளையும் வலுப்படுத்த வேண்டும் என்று கடல்சார் தொழில்துறை நிபுணரும் Maritime Network Sdn Bhd நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான டத்தோ ஸ்ரீ ஆர். ஜெயேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தோனேசியா கடந்த அக்டோபர் 24-ஆம் தேதி முதல் சிங்கப்பூருக்கான இயற்கை எரிவாயு விநியோகத்தைக் குறைக்கத் தொடங்கியுள்ளது.

தனது உள்நாட்டு மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, நடுனா மற்றும் சுமத்ரா பகுதிகளிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட எரிவாயுவின் ஒரு பகுதியை உள்நாட்டுப் பயன்பாட்டுக்குத் திருப்பிவிட இந்தோனேசிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை இரு நாடுகளுக்கிடையே எரிசக்தி விநியோகம் தொடர்பான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், எரிவாயு விநியோகக் குறைப்பு ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் குறைந்தபட்ச விநியோக வரம்பிற்குள் இருப்பதாக இந்தோனேசிய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த டத்தோஸ்ரீ ஜெயேந்திரன், ஒவ்வொரு நாடும் தனது இயற்கை வளங்களையும் எரிசக்தி கட்டமைப்புகளையும் முதலில் உள்நாட்டுத் தேவைகளுக்கும் நீண்டகாலப் பொருளாதார நலன்களுக்கும் பயன்படும் வகையில் மேம்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்தோனேசியாவின் தற்போதைய நடவடிக்கை, எரிசக்தி பாதுகாப்பு என்பது வெறும் வர்த்தக விவகாரம் மட்டுமல்ல; அது நாடுகளுக்கிடையிலான உறவுகள், பொருளாதார நலன்கள் மற்றும் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய முக்கிய அம்சம் என்பதையும் எடுத்துக்காட்டுவதாக அவர் கூறினார்.

மலேசியாவும் இந்தப் பிராந்திய நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து, தனது இயற்கை வளங்களை மேம்படுத்துவதற்கும் உள்நாட்டு எரிசக்தி உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

குறிப்பாக, உலகின் முக்கியமான சர்வதேசக் கப்பல் போக்குவரத்துப் பாதைகளில் மலேசியா அமைந்துள்ளதால், அந்தப் புவியியல் சிறப்பை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

சர்வதேசக் கப்பல்களுக்கு எரிபொருள் வழங்கும் பங்கரிங் (Bunkering) தொழில்துறையை மேம்படுத்துவதன் மூலம் மலேசியா கூடுதல் வருமானத்தை ஈட்ட முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பெட்ரோலிய வளங்கள், துறைமுக வசதிகள் மற்றும் கடல்சார் சேவைகளை ஒருங்கிணைத்து மேம்படுத்தினால், மலேசியா பிராந்திய அளவில் முக்கியமான கப்பல் போக்குவரத்து மற்றும் எரிசக்தி மையமாக உருவெடுக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், மலேசியக் கடல் வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகம், எரிபொருள் சேமிப்பு மற்றும் இதர கடல்சார் சேவைகளை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதாரப் பயன்களை அதிகரிக்க முடியும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles