
சுபாங், அக். 29—
சுபாங், எஸ்.எஸ்.13 பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தின் தற்போதைய நிர்வாகம் மீது, ஆலயத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் நிர்வாகிகள் மற்றும் கணக்காய்வாளர் ஆகியோர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
ஆலயத்தின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வரவு செலவுக் கணக்குகளில் முறைகேடுகள் இருப்பதாகவும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். மேலும், நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியவர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்படுவதாகவும் தெரிவித்தனர்.
*43 ஆண்டுகளாகப் பிரச்சினையின்றி செயல்பட்ட ஆலயம்!*
ஆலயத்தின் முன்னாள் தலைவர் மாரியப்பன் கூறுகையில், சுங்கை வே தோட்டத்தில் மாரியம்மன் ஆலயமும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயமும் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
பின்னர், 1977ஆம் ஆண்டு எஸ்.எஸ்.13 பகுதியில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் ஆலயத்தை மேம்பாட்டு நிறுவனம் கட்டிக் கொடுத்ததாகவும், அதன் பின்னர் 43 ஆண்டுகளாக எந்தப் பிரச்சினையும் இன்றி ஆலயம் செயல்பட்டு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆனால், தற்போதைய நிர்வாகம் சுயநலத்துடன் செயல்படுவதாகத் தாம் கருதுவதாகக் கூறிய அவர், ஆலயத்தின் வளர்ச்சிக்காகப் பல்வேறு உதவிகள் செய்யப்பட்டிருந்தாலும், அவை முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என்றும், நிர்வாகச் செயல்பாடுகளிலும் குறைபாடுகள் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், கடந்த ஒன்பது ஆண்டுகளாக டத்தோ பத்மநாதன் மூலம் ஆலயத் தேர் திருவிழா நடத்தப்பட்டு வந்ததாகவும், தற்போது அந்த நிகழ்ச்சியும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
எனவே, ஆலயத்தின் தற்போதைய நிர்வாகம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
*தேர் திருவிழா மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் நிறுத்தம்!*
ஆலயத்தின் முன்னாள் தலைவர் மாரியப்பனின் மகன் முருகேசன் கூறுகையில், 2019ஆம் ஆண்டு முதல் ஆலயத்தின் தேர் திருவிழா நடைபெற்று வந்ததாகத் தெரிவித்தார்.
இவ்வாண்டு ஆலய நிர்வாகம் தேர் திருவிழாவை நிறுத்திவிட்டதாகக் கூறிய அவர், தேர் பவனிக்காகக் காவல்துறையிடம் அனுமதி பெற்றிருந்தபோதிலும், நிர்வாகம் அதனை நடத்த அனுமதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டினார்.
கடந்த காலங்களில் ஆலயத்தில் பொங்கல் நிகழ்ச்சி, வண்ணம் தீட்டும் போட்டி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் நடத்தப்பட்டதாகவும், தற்போது அவையும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆலயத்தின் பாரம்பரிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்படுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
*2025ஆம் ஆண்டு கணக்கில் முறைகேடு எனக் குற்றச்சாட்டு!*
2024–2025ஆம் ஆண்டுகளுக்கான ஆலயக் கணக்காய்வாளராகப் பணியாற்றிய திலவதி கூறுகையில், 2024ஆம் ஆண்டுக்கான கணக்குகளில் சில பிரச்சினைகள் இருந்ததாகவும், அவற்றைச் சரிசெய்யுமாறு ஆலய நிர்வாகத்திடம் அறிவுறுத்தியதாகவும் தெரிவித்தார்.
ஆனால், 2025ஆம் ஆண்டுக்கான கணக்குகளில் பல முறைகேடுகள் இருப்பதாகத் தாம் கண்டறிந்ததாகக் கூறிய அவர், ஆலயத்துக்குக் கிடைத்த பணம் வங்கிக் கணக்கில் முறையாகச் செலுத்தப்படவில்லை என்றும் குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பாக நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியபோதும் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
குறிப்பாக, புரட்டாசி மாதத்தில் மட்டும் ஆலயத்துக்கு ஒரு லட்சம் வெள்ளிக்கும் அதிகமான வருமானம் கிடைப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்த வருமானத்துக்கான முறையான கணக்குகள் இல்லை என்றும் தெரிவித்தார்.
கணக்குகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பியதன் காரணமாகத் தாம் கணக்காய்வாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரம் தொடர்பாகச் சங்கங்களின் பதிவிலாகாவான ஆர்.ஓ.எஸ். (ROS) அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாகவும், ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த எட்டு பேர் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளதாகவும் திலவதி தெரிவித்தார்.
ஆலய நிர்வாகக் குழுவில் 14 பேர் இடம்பெற்றிருந்தாலும், முக்கிய முடிவுகளை எட்டு பேர் மட்டுமே எடுப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
*ஆலய நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை!*
ஆலயத்தின் முன்னாள் அறங்காவலர் முனியாண்டி கூறுகையில், நிர்வாகத்தில் நடைபெறும் நடவடிக்கைகள் குறித்து ஆலய உறுப்பினர்களுக்கு முறையான தகவல்கள் தெரிவிக்கப்படுவதில்லை என்றார்.
நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பும்போது, சம்பந்தப்பட்டவர்கள் பதவிகளிலிருந்து நீக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
ஆலயத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிர்வாகப் பொறுப்புகளை ஏற்க முன்வர வேண்டும் என வலியுறுத்திய அவர், ஆலயத்தின் உண்டியலை எண்ணுவதற்காக மட்டும் நிர்வாகத்துக்கு வரக்கூடாது என்றும், ஆலயத்தின் வளர்ச்சிக்கும் பக்தர்களின் நலனுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
*கேள்வி எழுப்பியதால் நிர்வாகத்திலிருந்து நீக்கம்!*
ஆலய நிர்வாகத்தில் முன்னர் இடம்பெற்றிருந்த தயாளன் கூறுகையில், நிர்வாகத்தின் செயல்பாடுகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பியதன் காரணமாகத் தங்களைக் குழுவிலிருந்து நீக்கியதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், ஆலயத் தலைவர் பக்தர்களிடம் முறையற்ற வகையில் நடந்துகொள்வதாகவும், இது தொடர்பாகப் பல புகார்கள் அளித்திருந்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆலய நிர்வாகத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், கணக்குகள் தொடர்பான சந்தேகங்கள், தேர் திருவிழா நிறுத்தம் மற்றும் நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை குறித்த புகார்கள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு உண்மை நிலை வெளிக்கொணரப்பட வேண்டும் என முன்னாள் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

