நஜிப்பின் அபராதத்தை செலுத்த திரட்டப்பட்ட RM50 மில்லியன் – நிதி ஆதாரம் குறித்து வெளிப்படைத்தன்மை அவசியம்: டாக்டர் சத்ய பிரகாஷ்

உலுசிலாஙகூர், நவ 10-

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் SRC International வழக்கில் விதிக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்துவதற்காகத் திரட்டப்பட்டதாகக் கூறப்படும் RM50 மில்லியன் நிதியின் மூலம் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் சத்ய பிரகாஷ் நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இந்த நிதி பொதுமக்களிடமிருந்து திரட்டப்பட்டதாகவும், அதன் விவரங்களை அதிகாரிகளிடம் வழங்க அம்னோ தயாராக இருப்பதாகவும் டத்தோஸ்ரீ அஹ்மத் ஸாஹிட் ஹமிடி தெரிவித்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், அதற்கான உறுதிமொழி மட்டும் போதாது என்றும், நிதி திரட்டப்பட்ட முறை, பங்களித்தவர்களின் பெயர்கள், ஒவ்வொருவரின் நன்கொடைத் தொகை மற்றும் பணத்தின் மூலத்தைப் பொதுமக்கள் அறியும் வகையில் வெளியிட வேண்டும்.

மருத்துவச் செலவுகள், பிள்ளைகளின் கல்வித் தேவைகள் மற்றும் அன்றாட வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் பல குடும்பங்கள் சிரமப்படும் நிலையில், தனிநபர் ஒருவரின் அபராதத்தைச் செலுத்துவதற்காக இவ்வளவு பெரிய தொகை திரட்டப்பட்டிருப்பது நிதி ஒதுக்கீட்டின் முன்னுரிமை குறித்த கேள்வியை எழுப்புகின்றன.

மேலும், குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் தலைவரை அரசியல் விசுவாசத்தின் அடிப்படையில் தொடர்ந்து ஆதரிப்பது இளைய தலைமுறைக்கு தவறான முன்னுதாரணமாக அமையக்கூடும்.

அதேவேளை, நன்கொடையாளர்கள் தங்களது விருப்பத்தின் அடிப்படையில் நிதியுதவி வழங்கலாம் என்றாலும், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சியுடன் தொடர்புடைய நிதி திரட்டலில் முழுமையான வெளிப்படைத்தன்மை அவசியம் என்றார். எதிர்காலத்தில் இந்த நன்கொடைகள் அரசாங்கத் திட்டங்கள், ஒப்பந்தங்கள் அல்லது சிறப்புச் சலுகைகளைப் பெறுவதற்கான காரணமாகப் பயன்படுத்தப்படாது என்பதற்கான உத்தரவாதமும் வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இறுதியாக, தனிநபர் மீதான விசுவாசம் அரசாங்க அதிகாரத்துடன் தொடர்புபடுத்தப்படக் கூடாது என்றும், இந்த விவகாரத்தில் பொதுமக்கள் கேள்வி கேட்கவும் தெளிவான பதிலைப் பெறவும் உரிமை உண்டு என்றும் டாக்டர் சத்ய பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles