நஜிப் வீட்டுக்காவலில் இருக்க அனுமதிக்கும் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, அந்தோனி லோக் உடனடியாக போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகினார்!

கோலாலம்பூர்:, நவ 10-
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக் தனது சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக்காவலில் கழிக்க அனுமதித்து கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, அந்தோனி லோக் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக விலகியுள்ளார்.

தான் ஏற்கெனவே அறிவித்திருந்த கொள்கை மற்றும் உறுதியான நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்தப் பதவி விலகல் முடிவை எடுத்ததாக லோக் தெரிவித்தார்.

மேலும், 2022 டிசம்பர் முதல் அமைச்சரவையில் பணியாற்றுவதற்கு தனக்கு நம்பிக்கையும் பொறுப்பும் வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

தனது பதவிக்காலம் முழுவதும் ஒத்துழைப்பும் அர்ப்பணிப்பும் வழங்கிய போக்குவரத்து அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் அவர் நன்றி கூறினார்.

அமைச்சுப் பொறுப்புகள் சுமுகமாக அடுத்தவரிடம் ஒப்படைக்கப்படுவதற்கும், அமைச்சின் பணிகள் மற்றும் திட்டங்கள் எந்தவித இடையூறுமின்றி தொடர்ந்து நடைபெறுவதற்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி, நஜிப்புக்கு நிபந்தனையுடன் கூடிய வீட்டுக்காவல் அனுமதி வழங்கப்பட்ட மன்னிப்பு வாரியத்தின் முடிவைத் தொடர்ந்து, தான் பதவி விலகப் போவதாக லோக் அறிவித்திருந்தார்.

கடந்த வாரம் அவர் வெளியிட்ட அறிக்கையில், நஜிப் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டில் அனுபவிப்பதற்காக அவரது இல்லத்துக்குச் சென்றடைந்தவுடன் தனது பதவி விலகல் உடனடியாக அமலுக்கு வரும் என்று தெரிவித்திருந்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

இன்று முன்னதாக, SRC International நிறுவனத்துடன் தொடர்புடைய வழக்கில் நஜிப்புக்கு விதிக்கப்பட்ட ஆறு ஆண்டு சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை, கோலாலம்பூரில் உள்ள தாமான் டூத்தா இல்லத்தில் வீட்டுக்காவலில் கழிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதுடன், 2028 ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை வீட்டுக்காவலில் இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி டத்தோ அஸ்லாம் ஸைனுடின், நவம்பர் 6ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்திய பின்னர் விடுதலை செய்வதற்கான உத்தரவை ரத்து செய்து, அதற்குப் பதிலாக இன்றைய உத்தரவை முழுமையாகப் பிறப்பித்தார்.

செப்டம்பர் 18ஆம் தேதி வழங்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய அரச மன்னிப்பின் அடிப்படையில், குறைக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை நஜிப் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கிய ஆணைக்கு இணங்க, நஜிப் தனது எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக்காவலில் கழிப்பதை ஏற்றுக்கொள்வதாக சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் (AGC) தெரிவித்துள்ளது.

நஜிப் வீட்டுக்குச் செல்லும் நடைமுறை

இதற்கிடையில், நஜிப்பின் வழக்கறிஞர் டான் ஸ்ரீ முஹம்மது ஷஃபி அப்துல்லா கூறுகையில், முன்னாள் பிரதமர் முதலில் காஜாங் சிறைச்சாலைக்குச் சென்ற பின்னர் வீட்டுக்காவலில் இருக்க தனது இல்லத்துக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

சிறைச்சாலை அதிகாரிகள், நஜிப்பை அவரது இல்லத்துக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு, வீட்டுக்காவலில் அவர் கடைப்பிடிக்க வேண்டிய TV நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை அவரிடம் வாசித்துக் காட்டுவார்கள் என்றும் ஷஃபி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles