அபிநய சேத்ரா நுண்கலைமைய மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் கண்கொள்ளாக் கலைவிழாவாக அமைந்தது!

தாப்பா, நவ. 17-

பாரம்பரியக் கலையின் அழகையும், கலைஞர்களின் கடின உழைப்பையும் ஒருசேரப் பறைசாற்றும் வகையில், மூன்று இளம் மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது.

தாப்பா புக்கிட் பாகார் மண்டபத்தில் நடைபெற்ற அபிநய சேத்ரா நுண்கலைமைய மாணவிகளின் இவ்வரங்கேற்றத்தில், ரீஷா பிரியா தங்கதுரை (13 வயது), தன்யாஸ்ரீ ஜெயகுமார் (15 வயது), ஹர்ஷினி சுந்தரமூர்த்தி (16 வயது) ஆகியோர் தங்களது நாட்டியத் திறமையை வெகுச் சிறப்பாக வெளிப்படுத்தினர்.

ஒன்றரை ஆண்டுகாலப் பயிற்சிக்குப் பின்னர் நடைபெற்ற இவ்வரங்கேற்றத்தில், மூன்று மாணவிகளும் பரதநாட்டியத்தின் பாரம்பரிய நடன அசைவுகள், முத்திரைகள், முகபாவனைகள் ஆகியவற்றை நேர்த்தியாக வெளிப்படுத்தி பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றனர்.

அபிநய சேத்ரா நுண்கலைமைய இயக்குநரும் நாட்டிய ஆசிரியருமான குரு ஸ்ரீமதி ந. விக்னேஸ்வரி சந்திரமோகனின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு வயலின், புல்லாங்குழல், மிருதங்கம் உள்ளிட்ட இசைக் கலைஞர்களின் நேரடி இசை கலைநயத்தைக் கூட்டியது.

நிகழ்ச்சியில் உரையாற்றிய குரு ஸ்ரீமதி விக்னேஸ்வரி, பாரம்பரிய பரதக் கலையை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு இந்தியரின் பொறுப்பாகும் என்றார். மேற்கத்திய கலை, கலாசாரத்தின் மீதான ஈர்ப்பு அதிகரிப்பதால் இளைய தலைமுறையினரிடையே பாரம்பரியக் கலைகள் மீதான ஆர்வம் குறைந்து வருவது கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

தாம் மூன்று வயதிலிருந்தே பரதநாட்டியம் பயின்று வருவதாகவும், 2020ஆம் ஆண்டு அபிநய சேத்ரா நுண்கலைக்கூடத்தைத் தொடங்கியதாகவும் தெரிவித்த குரு ஸ்ரீமதி விக்னேஸ்வரி, இதுவரை ஏழு சலங்கைப் பூஜை நிகழ்ச்சிகளை நடத்தி வைத்துள்ளதாகவும், இது தாம் ஏற்பாடு செய்யும் இரண்டாவது பரதநாட்டிய அரங்கேற்ற நிகழ்ச்சி என்றும் குறிப்பிட்டார்.

பரதநாட்டியம் மாணவர்களின் நினைவாற்றல், உடல் ஆரோக்கியம், நேர மேலாண்மை, ஒழுக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவதோடு கல்வி வளர்ச்சிக்கும் பெரிதும் துணைபுரியும் என்றார்.

கிராமப்புற மாணவர்களும் பரதநாட்டியக் கலையைக் கற்க வேண்டும் என்ற நோக்கில் குறைந்த கட்டணத்தில்j பயிற்சி வழங்கி வருவதாகக் கூறிய அவர், இது வருமான நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் பணியல்ல என்றும், கலை மீதான ஆர்வமும் அர்ப்பணிப்புமே தம்மை இப்பணியில் தொடர்ந்து ஈடுபடச் செய்வதாகவும் தெரிவித்தார்.

பெற்றோர்கள் தங்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப தகுதியான ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து பிள்ளைகளுக்குப் பாரம்பரியக் கலைகளைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். முறையான வழிகாட்டுதலுடன் இக்கலை வளர்க்கப்பட்டால் சர்வதேச அளவில் சிறந்து விளங்குவதோடு, எதிர்காலத் தலைமுறையினரிடமும் அதன் சிறப்பு தொடர்ந்து நிலைத்திருக்கும் என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் டத்தோ ஸ்ரீ நா. நவரத்தினம், டத்தோ ஏ. சுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர். பல்வேறு நாட்டியப் பயிற்சிக் கூடங்களைச் சேர்ந்த குருமார்கள் மற்றும் பொதுமக்களும் பங்கேற்றனர்.

அரங்கேற்றத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மூன்று மாணவிகளுக்கும் ‘நாட்டிய ரத்னா’ பட்டமும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. குரு ஸ்ரீமதி ந. விக்னேஸ்வரி சந்திரமோகன் மாணவிகளுக்கு ஆசி வழங்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles