கோத்தா கெமுனிங் வெள்ளம்: வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் செயல்திறனை மறுஆய்வு வலியுறுத்து

ஷா ஆலாம், நவ 17: இன்று பல பகுதிகளை மீண்டும் பாதித்த வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து, கோத்தா கெமுனிங் சுற்றுவட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் வெள்ளத் தடுப்புத் திட்டங்களின் செயல்திறனை மறுஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

உதாரணமாக, தாமான் கிரீன்வில்லில் (Taman Greenville) மேற்கொள்ளப்பட்ட வடிகால் விரிவாக்கப் பணிகள் போதுமானதாக இல்லை என்றும், அதனால் குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாகவும் அப்பகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் தெரிவித்தார்.

வெள்ளத்திற்கான மூல காரணத்தை முழுமையாகக் களையும் வகையில் தீர்வுகள் அமைவதை உறுதி செய்ய, தற்போதுள்ள தடுப்பு நடவடிக்கைகளை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியத்தை இச்சூழல் காட்டுவதாக அவர் கூறினார்.

தாமான் கிரீன்வில், ஜாலான் கெபூன், தாமான் புக்கிட் இண்டா மற்றும் தாமான் புங்கா ராயா ஆகிய பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதே வேளையில் ஸ்ரீ மூடாவில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“வடிகால்களை விரிவுபடுத்தும் பணிகள் மற்றும் வேறு சில நடவடிக்கைகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட போதிலும், குடியிருப்பாளர்களின் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.”

“எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் கவனம் செலுத்தாமல், உண்மையிலேயே பயனுள்ளதாக இருப்பதை உறுதி செய்ய அவற்றை மறுஆய்வு செய்ய வேண்டும் என்பதை இது காட்டுகிறது,” என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நேரடியாகக் களத்தில் இறங்கி தற்போதைய நிலையை ஆய்வு செய்வதோடு, வெள்ளத்திற்கான காரணங்களைக் கண்டறிந்து ஒருங்கிணைந்த தீர்வை உருவாக்க வேண்டும் என்றும் பிரகாஷ் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles