
ஷா ஆலாம், நவ 17 : வெள்ளத் தடுப்பு கட்டமைப்புகள் முறையாகச் செயல்படுவதை உறுதிசெய்ய, வடிகால் கதவு மற்றும் நீர் இறைக்கும் பம்புகளை ஆய்வு செய்வதற்கான பராமரிப்பு அட்டவணையை ஒருங்கிணைக்குமாறு சிலாங்கூர் ஊராட்சி மன்றங்கள் மற்றும் நீர்ப்பாசன, வடிகால் துறை ஆகியவை வலியுறுத்தப்பட்டுள்ளன.
திட்டமிட்ட முறையான அட்டவணை, ஒவ்வொரு பழுதையும் முன்கூட்டியே கண்டறிந்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க உதவும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எஸ். பிரகாஸ் தெரிவித்தார்.
“புக்கிட் கெமுனிங் மற்றும் இண்டா ரெசிடென்ஸ் பகுதிகளில், மழைநீர் வடிகால்கள் அடிக்கடி அடைபடும் பிரச்சினையைக் குடியிருப்பாளர்கள் எதிர்கொள்கின்றனர். மேம்பாட்டாளர்களிடம் முழுமையான திட்டமிடல் இல்லாததால், அவர்கள் சிறிய அளவிலான மேம்பாடுகளை மட்டுமே கவனத்தில் கொள்கின்றனர்.
வெள்ளம் வந்தாலோ அல்லது வேறு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டாலோ அது தங்களுக்குரிய பிரச்சினை இல்லை என்பது போல் அவர்கள் நடந்து கொள்கின்றனர்.
“இங்குதான் ஊராட்சி மன்றங்களின் பங்கு முக்கியமானது. திட்டமிடல் அனுமதி வழங்கும்போதே, முறையான வடிகால் தீர்விற்கான முழுமையான திட்டத்தை உறுதி செய்ய வேண்டும். பிறருடைய நிலத்திற்குள் நுழைய முடியாது என்று கூறி, பிரச்சினைக்குத் தீர்வு காணத் தங்களுக்கு உரிமை இல்லை என அவர்கள் தட்டிக்கழிப்பதை இதன் மூலம் தவிர்க்கலாம்.
“இந்தப் பகுதிகளில் ஊராட்சி மன்றங்களும், நீர்ப்பாசனத் துறையும் பராமரிப்பு அட்டவணையை ஒருங்கிணைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மேலும், முக்கியமான இடங்களில் உள்ள வடிகால் கதவுகள் மற்றும் பம்புகளை வாரந்தோறும் ஆய்வு செய்ய வேண்டும்.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பழுதுபார்ப்பு பணிகளின் நிலையை மக்கள் பிரதிநிதிகளும் குடியிருப்பாளர்களும் அறிந்துகொள்ள ஏதுவாக ஒரு தகவல் தொடர்பு வழியை ஏற்படுத்த வேண்டும்,” என்று அவர் இன்று கூறினார்.
2027-ஆம் ஆண்டிற்கான சிலாங்கூர் வரவுசெலவுத் திட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய பிரகாஸ், சம்பந்தப்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள ‘ஸ்க்ரூ பம்புகளுக்கு’ (pam skru) மின்சார இணைப்பு வழங்குவது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“ஸ்ரீ மூடா, ஜாலான் புக்கிட் கெமுனிங் பத்து 5 மற்றும் பத்து 8, கம்போங் புக்கிட் லாஞ்சோங் மற்றும் தாமான் புக்கிட் கெமுனிங் ஆகிய பகுதிகளின் குடியிருப்பாளர்களின் குரலாக நான் இதை முன்வைக்கிறேன்.
ஒவ்வொரு முறை பலத்த மழை பெய்யும்போதும், தங்கள் பகுதியில் உள்ள பம்புகள், வடிகால் கதவுகள் மற்றும் வடிகால்கள் நீர் வரத்தைத் தாங்குமா என்பதை அவர்கள் அறிய விரும்புகிறார்கள்.
“ஜாலான் ஸ்ரீகண்டி 25/14-இல் ஸ்க்ரூ பம்ப் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு இன்னும் மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) நிறுவனத்திடம் கேட்டபோது, மின்சார இணைப்பு வழங்க நேரமில்லை என்று பதிலளித்துள்ளனர்.
“நாம் இன்னும் எவ்வளவு காலம் காத்திருப்பது? வெள்ளம் வந்த பிறகுதான் மின்சார இணைப்பு வழங்க வேண்டுமா? இது ஸ்ரீ மூடாவில் மட்டுமல்ல, சிலாங்கூர் முழுவதும் உள்ள பம்புகளுக்கும் பொருந்தும். அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும்,” என்று அவர் கூறினார்.
இதனிடையே, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ‘ஸ்மார்ட் போக்குவரத்து அமைப்பு’ (ITS) முன்னோடித் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும் என்றும் பிரகாஸ் பரிந்துரைத்தார்.
“கோத்தா கெமுனிங் குடியிருப்பாளர்கள் பெர்சியாரான் அங்கெரிக் மொகாரா (Persiaran Anggerik Mokara), பெர்சியாரான் அங்கெரிக் ஒன்சிடியம் (Persiaran Anggerik Oncidium) மற்றும் பெர்சியாரான் அங்கெரிக் ஏரியா (Persiaran Anggerik Eria) ஆகிய சாலைகளில் நெரிசல் மிகுந்த நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்கின்றனர்.
அங்கு புதிய மேம்பாலம் கட்டப்படவுள்ளதாகக் கூறப்பட்டாலும், அது எப்போது தொடங்கி எப்போது முடியும் என்பது நமக்குத் தெரியாது.
“போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் ஒவ்வொரு நிமிடமும், வேலை, குடும்பம் அல்லது ஓய்விற்கான நேரத்திலிருந்து பறிக்கப்படுகிறது. மாநில அரசின் செயற்கை நுண்ணறிவுத் திட்டத்திற்கு ஏற்ப, மிகவும் நெரிசலான சந்திப்புகளில் உள்ளூராட்சி மன்றங்கள் இந்த முன்னோடித் திட்டத்தைத் தொடங்க வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன்.

