

கோலாலம்பூர், நவ 17: மலேசியாவிற்கு அதிகாரப்பூர்வ வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று பெட்டாலிங் சாலையின் (Petaling Street) சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு அழைத்துச் சென்றார்.
இரு நாடுகளின் பேராளர்கள், மூத்த அரசாங்க அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் புடைசூழ, இரு தலைவர்களும் மதியம் 2 மணியளவில் ‘சைனாடவுன்’ (Chinatown) அருகிலுள்ள அப்பகுதிக்கு வந்தடைந்தனர்.
இந்த அதிகாரப்பூர்வமற்ற பயணத்தில் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா யோவும் உடனிருந்தார்.
சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தப் பயணத்தின்போது, பிரபல சுற்றுலாத் தலமான இப்பகுதியின் சூழலையும் வணிக நடவடிக்கைகளையும் பார்வையிட்டபடி, கடைவீதிகள் வழியாக அன்வாரும் மக்ரோனும் நடந்து சென்றனர்.
மேலும், ஜாலான் துன் எச்.எஸ். லீ (Jalan Tun H.S. Lee) சாலையில் அருகருகே அமைந்துள்ள குவான் டி ஆலயம் (Guan Di Temple) மற்றும் ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான ஆலயம் ஆகிய இரு வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களுக்கும் அவர்கள் நேரில் சென்றனர்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த வணிகப் பகுதியின் தனித்துவமான கலாச்சாரப் பன்முகத்தன்மை, உள்ளூர் தயாரிப்புகள் மற்றும் அதன் வரலாறு குறித்து மக்ரோனுக்கு அன்வார் விளக்கமளித்தார்.
அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளைப் பார்த்துக் கையசைத்த இரு தலைவர்களும், அவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினர்.
இரு நாடுகளுக்கு இடையிலான அரச தந்திர உறவுகள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், மக்ரோனின் மலேசிய வருகையின்போது திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாகும்.
2017 மே மாதம் பிரான்ஸ் அதிபராகப் பதவியேற்ற பிறகு, மக்ரோன் மலேசியாவிற்கு மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வப் பயணம் இதுவாகும்.
மலேசியாவின் 10-வது பெரிய வர்த்தகக் கூட்டாளியாகவும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளில் 3-வது பெரிய கூட்டாளியாகவும் பிரான்ஸ் திகழ்கிறது.
2024-ஆம் ஆண்டை விட 11 விழுக்காடு அதிகரித்து, 2025-ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான மொத்த வர்த்தகம் 4.7 பில்லியன் யூரோவாக (சுமார் 21.23 பில்லியன் ரிங்கிட்) பதிவாகியுள்ளது.

