



தெலுக் இந்தான், நவ. 21-
பல்வேறு இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிப் பருவத்திலேயே ஒருவருக்கொருவர் நட்புறவுடனும் பரஸ்பர மரியாதையுடனும் பழகும் பண்பைப் பெறுவது, எதிர்காலத்தில் நாட்டின் இன நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கான வலுவான அடித்தளமாக அமையும் என்று மேனாள் தலைமையாசிரியரும் இன்னாள் சொத்துடமை சட்ட ஆலோசகரும் வழக்கறிஞருமான ஆறுமுகம் வேலு தெரிவித்தார்.
தெலுக் இந்தான் செயிண்ட் அந்தோனி தேசியப் பள்ளியின் தீபாவளிக் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், பள்ளி என்பது கல்வியை மட்டும் கற்றுக்கொடுக்கும் இடமாக இல்லாமல், வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஒற்றுமையாக வாழக் கற்றுக்கொள்ளும் தளமாகவும் விளங்க வேண்டும் என்றார்.
இந்தியர், சீனர், மலாய் எனப் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாகக் கல்வி பயிலும் சூழலில், இனம், மதம், மொழி, சமயம் ஆகிய வேறுபாடுகளுக்கு அப்பால் சக மாணவர்களைச் சகோதரத்துவத்துடன் அணுகும் மனப்பான்மை சிறு வயதிலேயே உருவாக்கப்பட வேண்டும். இத்தகைய வளர்ப்பு எதிர்காலத்தில் இனவாதம் மற்றும் பாகுபாடுகள் தலைதூக்குவதைத் தவிர்த்து, நாட்டின் ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த வகையில், செயிண்ட் அந்தோனி தேசியப் பள்ளியில் பயிலும் 220 பல்லின மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற தீபாவளிக் கொண்டாட்டம் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் கலாச்சாரப் புரிந்துணர்வையும் வெளிப்படுத்தும் சிறந்த நிகழ்வாக அமைந்ததாக அவர் பாராட்டினார்.
குறிப்பாக, இந்திய, மலாய், சீன இனங்களைச் சேர்ந்த மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது பாரம்பரியக் கலாச்சார உடைகளை ஒருவருக்கொருவர் மாற்றி அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது, பிற இனங்களின் கலாச்சாரத்தை மதித்துப் போற்றும் நல்லிணக்க உணர்வின் வெளிப்பாடாக அமைந்தது. இதனைக் காணும்போது தமக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் ஏற்பட்டதாகவும் ஆறுமுகம் வேலு குறிப்பிட்டார்.
இதனிடையே, பள்ளியின் தலைமையாசிரியர் கிருஷ்ண குமாரி கிருஷ்ணசாமி உரையாற்றுகையில், வெவ்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஒரே சமூகத்தின் அங்கத்தினர்கள் என்ற உணர்வுடன் பழக வேண்டும் என வலியுறுத்தினார்.
பிறரின் உணர்வுகள், நம்பிக்கைகள் மற்றும் கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு மதிக்கும் பண்பு மாணவர்களின் அன்றாட வாழ்க்கையில் இடம்பெற வேண்டும். பாடப் புத்தகக் கல்விக்கு அப்பால், பிற இன மக்களின் பண்பாடு, பாரம்பரியம் மற்றும் வாழ்வியல் முறைகளையும் அறிந்துகொள்வதன் மூலம் மாணவர்களிடையே ஆழமான நட்புறவும் ஒருவருக்கொருவர் உதவும் மனப்பான்மையும் உருவாகும் என்றார்.
இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் ஏற்பாட்டுக் குழுத் தலைவருமான ஆசிரியர் ஷாமளா தேவதாஸ் பேசுகையில், மாணவர்கள் பிற இனங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அறிந்துகொண்டு அவற்றுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இக்கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் டாக்டர் பிரமிளா கவுர், பள்ளி நிர்வாகப் பொறுப்பாளர்கள், மலேசிய முன்னேற்ற இலக்கவியல் சங்கத் தலைவர் சிவபாலன் முனியாண்டி, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

