இந்திய சமூகத்தினருக்கான தொழில்முனைவோர் வாய்ப்புகள் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும் – டத்தோஶ்ரீ ரமணன்

கோலாலம்பூர், நவ. 22-
இந்திய சமூகத்தினர், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் தொழில்முனைவோர் வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை, மலேசிய மடானி அரசாங்கம் பல்வேறு அமைச்சுகள், அரசாங்க நிறுவனங்கள் வாயிலாகத் தொடர்ந்து முன்னெடுக்கும்.

இதில் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா) முன்னெடுக்கும் பல்வேறு திட்டங்களும் அடங்கும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

அதிகமான இளைஞர்கள் தொழில்முனைவோர் துறையில் ஈடுபடுவதை ஊக்குவிப்பதுடன், ஏற்கெனவே தொழில் நடத்தி வருபவர்கள் தங்களது வணிகத்தை விரிவுபடுத்துவதற்கும் உதவும் வகையில் நிதியுதவி, தொழில் கடனுதவி, திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.

“அத்தகைய முயற்சிகளில் ஒன்றாக, இந்திய சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோருக்கு, குறிப்பாக பி40 – எம்40 பிரிவினருக்கு மானியங்கள், தொழில் தொடக்க மூலதனம் வழங்குவதற்காக மித்ரா மூலம் 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் உயர்வு மடானி திட்டம் செயல்படுத்தப்படுகிறது,” என்றார்.

செந்தூலில் உள்ள எச்.ஜி.எச் மாநாட்டு மண்டபத்தில், கோலாலம்பூர் – சிலாங்கூர் இந்திய வர்த்தக, தொழில்துறை சம்மேளனம் (கேஎல்சிக்கி) ஏற்பாடு செய்த 2026ஆம் ஆண்டு தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இளம் தொழில்முனைவோர் தங்களது தொழிலின் ஆரம்பக் கட்டத்தில் நிதியுதவியையும் தேவையான ஆதரவையும் எளிதில் பெறுவதற்கு, அரசாங்க நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், கேஎல்சிக்கி போன்ற வர்த்தக சம்மேளனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது என்றும் ரமணன் குறிப்பிட்டார்.

இதனிடையே, மித்ரா – கேஎல்சிக்கி இடையிலான ஒத்துழைப்பின் கீழ், 2020, 2022ஆம் ஆண்டுகளில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (எம்.எஸ்.எம்.இ) இரண்டு தொழில்முனைவோர் மேம்பாடு, உதவித் திட்டங்களைச் செயல்படுத்த 4 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான நிதி அங்கீகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 905 இந்திய சமூகத் தொழில்முனைவோர் இலக்காகக் கொள்ளப்பட்டதுடன், ஒவ்வொரு பயனாளிக்கும் அதிகபட்சமாக 5,000 ரிங்கிட் மதிப்பிலான வணிக உபகரண உதவிகள் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சில்லறை வணிகம், உற்பத்தி, கட்டுமானம், தொழில்முறை சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்திய சமூகத் தொழில்முனைவோர் ஆற்றி வரும் பங்களிப்பையும் ரமணன் பாராட்டினார்.

முந்தைய தலைமுறையினரின் அனுபவத்தையும் வெற்றியையும் அடிப்படையாகக் கொண்டு, இளைய தலைமுறையினர் சொந்தமாகத் தொழில் தொடங்கி, தொழில்முனைவோர் பாரம்பரியத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles