
கோலாலம்பூர், நவ 23-
எண்ணெய்ச் சரக்குகள் மீதான கண்காணிப்பு கப்பல்களில் நடைபெறும் நடவடிக்கைகளுடன் மட்டும் நின்றுவிடாமல், தரையிலுள்ள சேமிப்புத் தொட்டிகள் மற்றும் இதர வசதிகளையும் உள்ளடக்கியிருக்க வேண்டும் என்று மெரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டத்தோஸ்ரீ ஆர். ஜெயந்திரன் வலியுறுத்தினார்.
வட்டார அளவில் எண்ணெய் வர்த்தகம் மற்றும் கப்பல்களுக்கான எரிபொருள் விநியோக மையமாக மலேசியாவை வலுப்படுத்த, இத்தகைய முழுமையான கண்காணிப்பு முக்கியமானது என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
கடல் பயணத்தின்போது கப்பல்களில் குறிப்பிட்ட வகையிலான எண்ணெய்க் கலப்பு நடவடிக்கைகளுக்குச் சர்வதேசக் கடல்சார் விதிமுறைகள் தடை விதித்துள்ளன. அதேவேளையில், துறைமுகங்களில் இறக்கப்பட்ட பின்னர் எண்ணெய்ச் சரக்குகள் எவ்வாறு கையாளப்படுகின்றன என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
“எண்ணெய்ச் சரக்குகள் இறுதி இடத்தைச் சென்றடைவதற்கு முன்பு சேமிப்புத் தொட்டிகளுக்கு இடையே மாற்றப்படலாம். பிற பொருட்களுடன் கலக்கப்படலாம்; பதப்படுத்தப்படலாம் அல்லது மறுஏற்றுமதி செய்யப்படலாம்.
“இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானவை என்று கூற முடியாது. ஆனால், சுங்கம் மற்றும் உரிம நிபந்தனைகள், குறிப்பாக ஆவணங்கள் மற்றும் சரக்கு விவர அறிவிப்பு தொடர்பான விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
கடலில் உயிர் பாதுகாப்புக்கான சர்வதேச உடன்படிக்கையான ‘சோலாஸ்’ விதிமுறையையும் ஜெயேந்திரன் சுட்டிக்காட்டினார். அதன் ஆறாவது அத்தியாயத்தின் 5-2 விதி, கடல் பயணத்தின்போது கப்பல்களில் திரவச் சரக்குகளைக் கலந்து புதிய பொருளை உருவாக்குவதற்கும் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தடை விதிப்பதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளையில், புதிய பொருளை உருவாக்காத ஒரே வகையான சரக்குகளைக் கலப்பது அல்லது தொட்டிகளுக்கு இடையே மாற்றுவது தடை செய்யப்படவில்லை என்று கடல்சார் காப்புறுதி அமைப்பான கார்ட் வெளியிட்ட வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கப்பல், பணியாளர்கள் மற்றும் கடல் சுற்றுச்சூழலின் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்படும் சரக்கு மாற்றங்களுக்கும் விதிவிலக்குகள் உள்ளன.
இதற்கிடையே, கடலில் எண்ணெய்க் கலப்பு நடவடிக்கைகளுக்கான தடை தெளிவாக இருப்பதுபோல், தரையில் எண்ணெயைக் கையாளுதல் மற்றும் சேமித்தலும் நடப்புச் சட்டங்களுக்கு உட்பட்டவை என்று வழக்கறிஞர் ஜி.கே. கணேசன் தெரிவித்தார்.
“எண்ணெய்க் கப்பல்களைச் சுத்திகரிப்பு ஆலைகளாகப் பயன்படுத்த முடியாது. தரையைப் பொறுத்தவரை, சட்டம் இருக்கிறதா என்பதல்ல கேள்வி. அதற்கான சட்டங்கள் ஏற்கெனவே உள்ளன,” என்றார் அவர்.
1967ஆம் ஆண்டு சுங்கச் சட்டத்தின் 35என் பிரிவின்படி, சரக்கு மாற்றத்திற்காகப் பொருட்களைச் சேமித்துக் கையாளும் தரப்பினர், அவற்றின் வரவு, கையாளுதல், சேமிப்பு மற்றும் ஒப்படைப்பு விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் விளக்கினார்.
“அந்தப் பதிவுகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா? அவற்றிலுள்ள விவரங்கள் சுங்கத்திடம் அறிவிக்கப்பட்ட தகவல்களுடன் பொருந்துகின்றனவா என்பதே முக்கியம்.
“ஒரு தொட்டிக்குள் கச்சா எண்ணெயாகச் செல்லும் சரக்கு, வெளியே வரும்போது எரிபொருள் எண்ணெயாக இருந்தால், அந்த மாற்றம் தொடர்புடைய ஆவணங்களில் குறிப்பிடப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.
எந்தத் தரப்பும் சட்டத்தை மீறியதாகக் குற்றஞ்சாட்டவில்லை என்றும், ஆதாரமின்றி அவ்வாறு கருதக்கூடாது என்றும் கணேசன் தெளிவுபடுத்தினார்.
இருப்பினும், சரக்கு மாற்று மையங்களின் மீதான நம்பிக்கையை நிலைநிறுத்த, பதிவுகளும் சரக்கு விவர அறிவிப்புகளும் துல்லியமாக இருக்க வேண்டியது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார்.

