
கோலாலம்பூர், நவ. 25-
மலேசிய இந்தியர்களின் உரிமைகளையும் நீதியையும் வலியுறுத்தி, கடந்த 2007ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி நடைபெற்ற ஹிண்ட்ராஃப் அமைதிப் பேரணியின் 19ஆம் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இத்தனை ஆண்டுகள் கடந்தும் இந்தியச் சமூகத்தின் அடிப்படைப் பிரச்சினைகள் பல தீர்க்கப்படாமல் தொடர்வது கவலையளிப்பதாக மலேசிய முன்னேற்றக் கட்சி (MAP) துணைத் தலைவர் மோகன் எல்லப்பன் தெரிவித்துள்ளார்.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பேரணி, இந்தியச் சமூகத்தின் உரிமைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படும்போது மக்கள் ஒன்றிணைந்து நீதிக்காகக் குரல் கொடுக்கத் தயங்கமாட்டார்கள் என்பதை உலகிற்கு உணர்த்தியதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், இன்றைய இளம் தலைமுறையினரில் பலர் ஹிண்ட்ராஃப் போராட்டத்தின் வரலாறு, அதன் இலட்சியங்கள் மற்றும் அதற்குப் பின்னால் இருந்த தியாகங்கள் குறித்து முழுமையாக அறிந்திருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
19 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், ஹிண்ட்ராஃப் போராட்டத்தின் அடிப்படை இலட்சியங்கள் எந்த அளவிற்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்ற கேள்வி எழுவதாகக் குறிப்பிட்ட அவர், அப்போராட்டத்தில் பங்கேற்ற பல தலைவர்கள் பின்னர் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக உயர்ந்தபோதிலும், இந்தியச் சமூகத்தின் முக்கியப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவில்லை என்றார்.
குறிப்பாக, தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாடு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள், பதவி உயர்வு, குடியுரிமை, மயான நிலங்கள், ஆலய நிலங்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான சொந்த வீட்டு வசதி போன்ற அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் முழுமையாகத் தீர்க்கப்படாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மலேசியா சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகளில் தேசிய முன்னணி (BN), நம்பிக்கைக் கூட்டணி (PH), பெரிக்காத்தான் நேஷனல் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கூட்டணிகளின் ஆட்சிகளை மக்கள் கண்டுள்ளனர். பிரதமர்கள், அமைச்சர்கள் மற்றும் ஆளும் கட்சிகள் மாறியுள்ளபோதிலும், இந்தியச் சமூகத்தைப் பாதிக்கும் பல பிரச்சினைகள் மட்டும் தொடர்ந்து நீடிப்பதாக அவர் கூறினார்.
இந்தியச் சமூகத்தின் நலன்கள் உண்மையிலேயே நாட்டின் மேம்பாட்டுத் திட்டங்களில் முன்னுரிமை பெறுகின்றனவா அல்லது தேர்தல் காலங்களில் மட்டுமே இனிப்பான வாக்குறுதிகள் வழங்கப்படுகின்றனவா என்ற கேள்விக்கு அரசியல் தலைவர்கள் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை இந்தியச் சமூகம் எளிதில் மறந்துவிடும் என்றும், தங்களது உரிமைகள் மற்றும் நலன்கள் குறித்து அதிகமாகக் கேள்வி எழுப்பாமல் கிடைப்பதை ஏற்றுக்கொள்ளும் என்றும் சில தலைவர்கள் கருதுவதாகத் தோன்றுகிறது என அவர் விமர்சித்தார்.
இந்தியச் சமூகத்தின் உண்மையான மேம்பாட்டிற்கு வெறும் வாக்குறுதிகள் போதாது. தனித்துவமான மற்றும் இலக்கு சார்ந்த மேம்பாட்டுத் திட்டங்கள், போதுமான நிதி ஒதுக்கீடு, முறையான செயலாக்கம், அளவிடக்கூடிய இலக்குகள் ஆகியவற்றுடன் நீண்டகால அர்ப்பணிப்பும் அவசியம் என்றார்.
இந்த வகையில், மலேசிய முன்னேற்றக் கட்சி (MAP) மற்றும் ஹிண்ட்ராஃப் தலைவர் பி. வேதமூர்த்தி ஆகியோர் இந்தியச் சமூகத்திற்கான சிறப்பு மேம்பாட்டுத் திட்டங்களை மலேசியத் திட்டங்களில் (RMK) மற்றும் தேசிய வரவு செலவுத் திட்டத்தில் இடம்பெறச் செய்வதற்கான கோரிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், சட்டம் சார்ந்த பல்வேறு விவகாரங்களிலும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் மோகன் எல்லப்பன் குறிப்பிட்டார்.
இந்தியச் சமூகத்திற்குத் தற்போது தேவைப்படுவது துணிச்சல், நேர்மை, நாணயம் மற்றும் கொள்கைப்பற்றுடன் செயல்படும் தலைமைத்துவமாகும். ஊழலற்ற வகையில், அரசியல் பதவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் சமூகத்தின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாக்கத் துணியும் தலைவர்கள் உருவாக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஹிண்ட்ராஃப் போராட்டத்தின் உணர்வு வெறும் நினைவுகூரலாகவோ அரசியல் மேடைப் பேச்சாகவோ மட்டும் சுருங்கிவிடக் கூடாது. அப்போராட்டத்தின் இலட்சியங்கள் நடைமுறைக் கொள்கைகளாகவும், செயல்திட்டங்களாகவும், கண்கூடான சாதனைகளாகவும் மாற வேண்டும் என்றார்.
19 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தியச் சமூகத்திற்குத் தேவைப்படுவது இனிப்பான வாக்குறுதிகள் அல்ல; உறுதியான தீர்வுகளும் அர்த்தமுள்ள மாற்றங்களுமே எனக் குறிப்பிட்ட மோகன் எல்லப்பன், இந்தியச் சமூகத்தின் உரிமைகளும் இலட்சியங்களும் நிறைவேறும் வரை போராட்டம் ஓயாது என்று தெரிவித்தார்.

