


கோலாலம்பூர், மே 2-
உலகின் மூத்த தமிழ்ப்பத்திரிகைகளில் ஒன்றாகவும் இந்நாட்டு இந்திய சமூகத்தின் சமூக மற்றும் அரசியல் விழிப்புணர்வுக்கும் பெரும் பங்காற்றிய ஊடகமாகவும் விளங்கிய தமிழ் நேசன் தோற்றுவிக்கப்பட்டு அடுத்தாண்டுடன் நூறு ஆண்டுகள் நிறைவடைகிறது.
இந்த உன்னத தருணத்தை நினைவுக் கூறும் வகையில் அந்த பத்திரிகையின் நூற்றாண்டு நிறைவு தினத்தை அதன் முன்னாள் ஊழியர்கள் சிறப்பான முறையில் கொண்டாடவுள்ளனர்.
முன்னாள் ஊழியர்களின் உணர்வுகளில் இரண்டறக் கலந்து விட்ட இந்த நாளேட்டின் வரலாற்றை உலகிற்கு எடுத்துரைக்கும் நோக்கிலான் இந்த நிகழ்வு அடுத்தாண்டு செப்டம்பர் மாதவாக்கில் நடத்தப்படும் என்று அதன் ஏற்பாட்டுக் குழுத் தலைவரான கு.ச.ராமசாமி கூறினார்.
தமிழ் நேசன் பத்திரிகை வெளியீட்டை சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் நிறுத்திக் கொண்ட போதிலும், அதன் பணியாளர்கள் இன்று வரை ஒன்றுகூடும் நிகழ்வை மிகவும் சிறப்பான முறையில் நடத்தி வருவதாக அவர் சொன்னார்.
செந்தூல் கப்பளா கறி ஹவுஸ் உணவகத்தில் நேற்று நடைபெற்ற தமிழ் நேசன் முன்னாள் பணியாளர்களின் 7ஆம் ஆண்டு ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த ஒன்று கூடும் நிகழ்வுக்கு கடந்த ஏழு ஆண்டுகளாக ஏற்பாட்டு ஆதரவை வழங்கி முழு செலவுகளையும் ஏற்றுக் கொண்ட தமிழ் நேசன் முன்னான் பணியாளரும் தொழிலதிபருமான சுப்பிரமணியம், நூற்றாண்டு நிறைவு தின விழாவுக்கான செலவுகளையும் முழுமையாக ஏற்றுக் கொள்ள முன்வந்துள்ளதாக அவர் சொன்னார்.
தமிழ் நேசன் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர்களான வே. விவேகானந்தன், கே.பத்மநாபன், எம்.எஸ். மலையாண்டி, தமிழ் நேசன் முன்னாள் விளம்பரப் பிரிவு நிர்வாகியும் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவருமான ஞானசைமன் மற்றும் பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றியவர்கள் இந்நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர்.
மலேசிய தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத் தலைவர் கு.தேவேந்திரன் இந்நிகழ்வுக்கு சிறப்பு வருகை புரிந்தார்.
தமிழ் நேசன் முன்னாள் பணியாளர் பாண்டி சிவம் குடும்பத்தின் சார்பில் அவரின் புதல்வி திருமதி ராஜலட்சுமி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.
இந்த ஒன்று கூடும் நிகழ்வுக்கான மாலை பொன்னாடை ஆகியவற்றுக்கான செலவுகளை தமிழ் நேசன் டிவி நிர்வாகத்தினர் ஏற்றுக் கொண்டனர்.
மலேசிய தமிழ்ப் பத்திரிகை துறைக்கு முன்னோடியாக விளங்கிய தமிழ் நேசன் கடந்த 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடி காரணமாக 94 ஆண்டுகாலப் பயணத்திற்குப் பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி அது தனது வெளியீட்டை நிறுத்திக் கொண்டது.

