
கோலாலம்பூர், மே 10-
மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவிற்கான (மித்ரா) நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு கூடுதலாக RM50 மில்லியன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 2026-ஆம் ஆண்டிற்கான மித்ராவின் மொத்த நிதி ஒதுக்கீடு RM150 மில்லியனாக உயர்ந்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
இன்று காலை மலாயா பல்கலைக்கழகத்தில் இந்திய இளங்கலை மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டார்.
மித்ராவின் செயல்பாடுகளுக்குப் பாராட்டு
2026-ஆம் ஆண்டிற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டிருந்த RM100 மில்லியன் நிதியைக் கொண்டு, இந்திய சமூகத்திற்காக மித்ரா முன்னெடுத்து வரும் திட்டங்களையும் அதன் அண்மைய செயல்பாடுகளையும் பிரதமர் வெகுவாகப் பாராட்டினார்.

“மித்ரா ஒரு சிறப்பு வாய்ந்த அமைப்பு. இந்திய சமூகத்தின் உயர்கல்வி அறிஞர்களின் ஆலோசனைகளை உள்வாங்கிச் செயல்படும் ஆற்றல் அதற்கு உண்டு. எனினும், இத்திட்டங்கள் தகுதியுடைய அடித்தட்டு மக்களைச் சென்றடைவதை நாம் இன்னும் உறுதிப்படுத்த வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, இந்திய சமூகத்தின் மேம்பாட்டுத் தேவைகளைக் கருத்தில் கொண்டு மித்ராவிற்கான ஒதுக்கீட்டை உயர்த்துமாறு மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
நீதி வழுவா ‘மடாணி’ கொள்கை
மலேசியா ‘மடாணி’ (MADANI) கட்டமைப்பின் கீழ் அரசாங்கத்தின் செயல்பாடுகள் அனைத்தும் சமூக நீதி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.

“இந்த நிதி இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படுகிறது. அந்தச் சமூகத்தில் உள்ள அனைவரும் வசதியானவர்கள் அல்ல; தோட்டப்புறங்களிலும் தொழிலாளர் வர்க்கத்திலும் இன்னும் பலர் ஏழ்மையிலும் விளிம்பு நிலையிலுமே வாழ்கின்றனர். புலாவ் பாங்கி மக்களுக்கு நாம் முன்னுரிமை அளித்து உதவியது போல, ஆதரவு தேவைப்படும் இந்திய சமூகத்திற்கும் கரம் கொடுப்பது நமது கடமை,” என்று அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார்.
சமரசமற்ற பாதுகாப்பு
இனப் பாகுபாடின்றி அனைத்து மலேசியர்களின் நலனையும் பாதுகாப்பதில் தனது அரசாங்கம் உறுதியாக இருப்பதாக உறுதியளித்த அன்வார், “எந்தச் சவால்கள் வந்தாலும், இனம் அல்லது பின்னணி பார்க்காமல் ஒவ்வொரு மலேசியருக்கும் முழுமையான பாதுகாப்பும் ஆதரவும் வழங்கப்படும்.
இந்த வாக்குறுதியிலிருந்து மடாணி அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்காது; நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவேன்,” என்று நெகிழ்ச்சியுடன் தனது உரையை நிறைவு செய்தார்.

