

கோலாலம்பூர், ஜூன் 7-
இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் எதிர் நோக்கி இருக்கும் அந்நிய தொழிலாளர் பிரச்சனைக்கு மிக விரைவில் நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இன்று அறிவித்தார்.
அந்நிய தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில்
உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் மற்றும் உள்நாட்டு வர்த்தக வாழ்க்கை செலவின அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாவூடின் ஆயோப் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
அமைச்சரவை ஒப்புதல் பெறுவதற்கு ஏதுவாக வரும் 27 ஆம் தேதி மூன்று அமைச்சுகளுடன் மீண்டும் முக்கிய சந்திப்பு நடைபெறும்..
அதன் பின்னர் அமைச்சரவை ஒப்புதலோடு நல்ல செய்தி வரும் என்று சிவகுமார் அறிவித்தார்.
இன்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற முக்கிய சந்திப்பு கூட்டத்தில் உள்துறை அமைச்சு மற்றும் உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் எதிர் நோக்கி இருக்கும் அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சனையை ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளதை நான் அறிவேன் என்று அமைச்சர் சிவகுமார் அதிகாரிகளிடம் எடுத்துரைத்தார்.
பலமுறை இவர்கள் என்னை சந்தித்து உதவியை நாடியிருக்கிறார்கள்.
கடந்த 2009 இல் இந்த மூன்று துறைகளுக்கும் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி ரத்து செய்யப்பட்டது.
பின்னர் 2019 இல் இது முற்றாக ரத்து செய்யப்பட்டது.
பரிதவித்து கொண்டிருக்கும் இந்த மூன்று துறைகளுக்கும் அந்நிய தொழிலாளர்களை தருவிக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாக காத்திருக்கும் மூன்று துறைகளை சேர்ந்தவர்களும் இனி நல்ல செய்தி மிக விரைவில் வரும் என்றார்.

