


கோலாலம்பூர் ஜூலை 28-
டிரா மலேசியா (DHRRA Malaysia) மற்றும் தி-ரைஸ் (The Rise) எழுமின் குழுமத்தின் ஏற்பாட்டில் ஜூலை 28,29 மற்றும் 30 தேதிகளில் 11-ஆம் உலகத் தமிழர் தொழில் முனைவோர் மாநாடு மிகப்பெரிய அளவில் நடைபெறுவதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்
மலேசிய அனைத்துலக வாணிப, கண்காட்சி மையம் (MITEC)- இல் மூன்று நாள் நடைபெறும் இந்த மாநாட்டில்
இந்தியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் கலந்து கொண்டிருப்பதை பார்க்கும் போது உள்ளம் பூரிக்கிறது.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், தொழில் முனைவோர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் உலகத் தமிழர் ஒன்றுகூடலாக இம்மாநாடு இது விளங்குகிறது.
இந்திய துணைகண்டத்தில் தொன்மையான வரலாறைக் கொண்ட; சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் கடந்த 2018-ஆம் ஆண்டு (The Rise) எழுமின் குழுமத்தின் முதல் மாநாடு நடைபெற்றது.
இப்போது மீண்டும் இந்த மாநாட்டை டிரா மலேசிய தலைவர் சரவணன் சின்னப்பன் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தகவல் தொழில்நுட்பம்,
கல்வி, மருத்துவம், சட்டத்துறை, பொறியியல், உணவுத் தொழில் துறை, ஹலால் தொழில்துறை, ஜவுளித் துறை என பல்வேறு துறைகளைச் சேர்ந்த வணிக சமூகத்தினர் இம்மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
வேலை தேடும் சமூகம் என்ற நிலைமாறி வேலைகளை உருவாக்கும் சமூகமாக நாம் உயர உலகத் தமிழர் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் மாநாடு சிறந்த அடித்தளத்தினை அமைத்துத் தரும் என்பதில் ஐயமில்லை.
வணிக வாய்ப்புகள், முதலீடுகள் போன்றவற்றை உலகத் தமிழர்கள் உரிய வழியில் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது உரையில் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற தொடக்க விழாவில் பல தொழில் முனைவர்களை மனித வள அமைச்சர் சிவகுமார் வரவேற்று பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சாகுல், CyberJaya university நிறுவனர் டான்ஸ்ரீ பாலன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

