


நீலாய், ஜூலை 30
மலேசிய சைவ சமயப் பேரவை நடத்தும் ஆறாம் உலக சைவ சமய மாநாட்டினை தொடக்கி வைத்து சிறப்புரை ஆற்ற அழைத்தமைக்கு பேரவையின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
மலேசிய சைவ சமயப் பேரவை 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் நாள் திருவாடுதுறை ஆதீன 23- ஆவது குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாசதேசிக பரமாச்சாரிய சுவாமிகளின் அருளாசியுடன் திறப்புவிழா கண்டது.
சமய அறிவை பரப்புவதும், சமய விழாக்களை ஆகம முறைப்படி நடத்த வழிகாட்டியாகவும், முறையான சமயக் கல்வியை வழங்குவதும் பேரவையின் தலையாய நோக்கமாய் இருப்பதைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன்.
முறைசார் சமயக் கல்வியை தருவதும் ஆலயம் முறையாக நிர்வகிக்க வழிகாட்டியாக செயல்படவும் சமயக் கல்லூரி அமைப்பதும் பேரவையின் ஆதரவு அமைப்பாய் திகழும் சைவத் திருக்கோயில் கலை கல்வி அற வாரியமாகும்.
சமயக் கல்லூரி அமைப்பதற்கு சிலாங்கூர் , கெர்லிங் அருகில் ஏழரை ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு கல்லூரி அமைப்பதற்கான அரசு துறைகளின் அனிமதியும் பெறப்பட்டுள்ளது என்ற தகவலை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்.
18 லட்சம் வெள்ளியில் வாங்கப்பட்ட இந்த நிலத்தில்
50 மில்லியன் மதிப்பில் சமயக் கல்லூரி கட்டுவதை பெரிதும் வரவேற்கிறேன்.
எனது சார்பில் இந்த சமய கல்லூரி கட்டுமான பணிக்கு முதல் கட்டமாக ஒரு லட்சம் வெள்ளியை வழங்குவதாக பெரும் கைத்தட்டலுக்கிடையே மனிதவள அமைச்சர் சிவகுமார் அறிவித்தார்.
சைவத் திருநெறியும் சைவத் தமிழும் மலேசிய மண்ணில் அழுந்தி நிலை கொள்வதற்கு ஏற்ற திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தமது உரையில் குறிப்பிட்டார்

