


செராஸ், ஆக.6
இத்தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் டூசுன் தூவா மக்களின் நல்வாழ்வுக்காகத் தொடர்ந்து பாடுபடுவதோடு மக்களின் ஒவ்வொரு பிரச்சனையையும் நேரில் கண்டறிந்து அதற்குத் தீர்வு காணப் போவதாக இத்தொகுதியின் வேட்பாளரான டத்தோ ஜொஹான் அப்துல் அஜிஸ் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்றத் தேர்தல் பிரச்சாரத்தில் உரையாற்றிய போது ஜொஹான் இதனைத் தெரிவித்தார்.
இந்த டூசுன் தூவா தொகுதியில் வெள்ளப் பிரச்சனை ஏற்பட்ட போது 1 மாத காலத்தில் நாங்கள் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டோம். அதனால் இத்தேர்தலில் வெற்றி பெற்றால் வெள்ளப் பிரச்சனைக்கு நான் தீர்வு காண்பேன்.
நான் செமினி சட்டமன்ற உறுப்பினராக 2 தவணைகளில் 10 ஆண்டு காலம் இருந்திருக்கிறேன். இதில் என் சேவையைப் பற்றி செமினி தொகுதி மக்கள் நன்கு அறிவர். அந்த வகையில் இனம், சமய பேதமின்றி அனைவருக்கும் நான் உதவிகள் செய்வேன்.
என்னுடைய அலுவலகம் ஒரு சமூகநல இலாகா அலுவலகத்தைப் போல்தான் இருக்கும். அந்த அளவுக்குப் பொதுமக்கள் எப்போதும் வந்துக் கொண்டுதான் இருப்பார்கள். இதுவரை சிரமத்தின் பிடியில் இருக்கும் ஏராளமானோருக்கு நான் உதவிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறேன்.
சட்டமன்ற உறுப்பினராகுவதற்கு முன்பு நகராண்மைக் கழக உறுப்பினராகப் பணியாற்றி இருக்கிறேன்.
இம்முறை நடைபெறும் தேர்தலில் பக்காத்தான் கட்சியுடன் இணைந்து நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். அதனால் அதன் உறுப்புக் கட்சிகளான பி.கே.ஆர்., ஜ.செ.க., அமானா, ம.இ.கா., ம.சீ.ச., ஐ.பி.எப். கட்சி உறுப்பினர்கள் எனக்கு நிறைய உதவிகளைச் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இத்தேர்தலில் நான் வெற்றி பெற்றால் இங்குள்ள மக்களுக்கு நிச்சயம் சேவையாற்றுவேன் என்றார்.
ம.இ.கா. உலு லாங்காட் தொகுதித் தலைவர் டத்தோ வீ.செல்வராஜா, ஐ.பி.எப். கட்சியின் பொதுச் செயலாளர் மோகன், டி.கே.பிரதர்ஸ் ஆலோசகர் டத்தோ கலையரசு, ஐ.பி.எப். தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் கணேஷ்குமார் டத்தோ சம்பந்தன், டத்தோ மகேந்திரன், செமினி பி.கே.ஆரைச் சேர்ந்த டத்தோ சுகு மற்றும் ம.இ.கா. உறுப்பினர்கள், பக்காத்தான் உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட 2,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நேற்று முன்னாள் கினாபாத்தாங்கான் நாடாளுமன்ற உறுப்பினர், டத்தோ புங் மொக்தார் உட்பட இன்னும் பலர் உரையாற்றிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதனிடையே பி.கே.ஆர். உலு லாங்கட் தொகுதித் தலைவர் இராஜன் முனுசாமி அவர்கள் உரையாற்றுகையில், ஒற்றுமை அரசாங்கத்தில் முதன்முறையாக பக்காத்தானும் தே.மு.வும் இணைந்து மேற்கொள்வதால் இதில் டத்தோ ஜொஹான் மற்றும் செமினி சட்டமன்ற உறுப்பினர் வான் ஸுலாய்கா அனுவார் ஆகியோரின் வெற்றிக்கு நாங்கள் நிச்சயமாகப் பாடுபடுவோம் என்றார்.

