
கோலாலம்பூர் செப் 11-
இந்திய உலோகப் பொருள் மறுசுழற்சி கடைகளில் அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள எங்களுக்கும் உதவி புரியுங்கள் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமாரிடம் இன்று வட மாநில மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சங்கம் கோரிக்கையை முன் வைத்தது.
வட மாநில மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தின் தலைவர் ஆர். அசோக் குமார், துணை தலைவர் ஏ. முருகேசன், செயலாளர் ஜி. சிவராஜ், பொருளாளர் எஸ். குமரவேல், கமிட்டி உறுப்பினர்களான எஸ். உஷாராணி, ஆர். ஆனந்தன் ஆகியோர் இன்று கோலாலம்பூரில் மனித வள அமைச்சர் சிவகுமாரை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தினர்.
2009 ஆம் ஆண்டில் அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது.
அதன் பின்னர் கடந்த 14 ஆண்டுகளாக இந்திய உலோகப் பொருள் மறுசுழற்சி கடைகளில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்கள் இல்லாமல் நாங்கள் பெரும் இன்னல்களை எதிர் நோக்கி வருகிறோம் என்று சங்கத்தின் தலைவர் அசோக் குமார் தெரிவித்தார்.
உலோக பொருள் மறுசுழற்சி வியாபாரத்தில் அதிக அளவில் இந்தியர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அழுக்கு படிந்த இந்த கடினமான துறையில் வேலை செய்வதற்கு உள்ளூர் தொழிலாளர்கள் முன் வருவதில்லை.
அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்ள வாய்ப்பு வழங்கினால் வட மாநிலங்களில் 300 க்கும் மேற்பட்ட இந்திய வியாபாரிகள் நன்மை அடைவார்கள் என்று அவர் சொன்னார்.
இந்திய உணவகங்கள் மற்றும் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் வேலை செய்ய அந்நியத் தொழிலாளர்களுக்கு அனுமதி பெற்று தந்த மனித வள அமைச்சர் சிவகுமார் எங்களுக்கும் உதவ வேண்டும் என்றார் அவர்.
பல துறைகளுக்கு அந்நிய தொழிலாளர்கள் கிடைத்து விட்டார்கள்.
எங்களுக்கும் மனிதவள அமைச்சர் சிவகுமார் உதவி செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இவர்கள் முன் வைத்த கோரிக்கையை மனித வள அமைச்சர் சிவகுமார் ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

