

கோலாலம்பூர், அக்.25-
பிரதமரின் அரசியல் செயலாளர், டத்தோ அஸ்மான் அபிடின் பிரிக்பீல்ட்சிற்கு வருகையளித்து தீபாவளிச் சந்தை சம்பந்தமாக நல்ல அறிவிப்பைச் செய்து இச்சந்தை திறக்கப்பட்ட பின் அனைவரும் சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு செய்யாமல் சந்தை பகுதியைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்கான மேல் விவரங்களை மாநகர் மன்றம் அறிவிக்கும் என்று கூறியதைத் தொடர்ந்து பிரிக்பீல்ட்ஸ் வட்டார மக்களும் வியாபாரிகளும் டத்தோ அஸ்மானுக்குத் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசு மடானி அரசு என்பதை உண்மையாக நிரூபித்துள்ளது என்று டத்தோ மலர்விழி குணசீலன் தெரிவித்தார்.
தீபாவளிச் சந்தையில் தங்களுக்கு இடம் கிடைக்கவில்லை என்று கடந்த சனிக்கிழமை பிரிக்பீல்ட்ஸ் வட்டார இந்தியச் சகோதரிகள் தங்களின் அதிருப்தியைத் தெரிவித்ததோடு சங்கத்திற்கும் கிடைக்கவில்லை என்று குரல் பதிவில் குறிப்பிட்டனர்.
அரசாங்கத்தில் இந்திய சமூகத்தின் ஏகபோக அமைச்சர், துணையமைச்சராக இருக்கும் வீ.சிவகுமார், சரஸ்வதி கந்தசாமியை அணுகினால் பின்தங்கிய இந்திய சமுதாயத்தை முன்னுக்கு இட்டுச் செல்லத் துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும் மாண்புமிகு வீ.சிவகுமார் மற்றும் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி இருவரும் புயலெனப் புறப்பட்டு உதவுகிறார்கள் என டத்தோ மலர்விழி குணசீலன் நம்பிக்கைத் தெரிவித்தார்.
அதே ஞாயிறன்று மனம் கேட்காமல் டத்தோ பண்டார், டத்தோ கமாருஷாமானுக்கு இந்த இந்திய சகோதரிகளின் அவலக்குரலை கவனிக்கும்படி செய்தி அனுப்பியிருந்ததாகவும் சம்பந்தப்பட்ட இலாகாவின் உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி உதவுமாறு தாம் கேட்டுக் கொண்டதாகவும் டத்தோ மலர்விழி குணசீலன் குறிப்பிட்டார்.
பிரிக்பீல்ட்சிலுள்ள சங்கம் தங்களது பாரம்பரியத் தீபாவளிச் சந்தை இடத்திற்கு ஜாலான் துன் சம்பந்தன், ஜாலான் லோரோங் ஆ தோங் ஆகிய இடங்களுக்கு மனுச் செய்திருந்ததாகவும் அதை மாநகர் மன்றம் நிராகரித்து விட்டதாகவும் மாநகர் மன்றம் மூலம் தமக்குத் தெரியப்படுத்தப்பட்டதாகவும் சங்கம் விண்ணப்பித்த இடத்தில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாலும் அவ்வட்டாரத்தில் ஆடம்பர அடுக்ககத்தின் மேம்பாட்டுப் பனிகள் முடிவுற்றக் காரணத்தினாலும் பார்வையற்றோருக்கான நடைப்பாதை மற்றும் தடுப்பு நடவடிக்கை போன்றவற்றால் சங்கத்தின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தமக்குத் தெரிவிக்கப்பட்டது என்று டத்தோ மலர்விழி குணசீலன் கூறினார்.
அதன் பிறகு அச்சங்கம் மாநகர் மன்றத்திடம் மீண்டும் மேல் முறையீடு செய்ததாகவும் அந்த மேல் முறையீட்டை மாநகர் மன்றத்தின் சிறப்புக் குழு கடந்த 16ஆம் தேதி ஜாலான் துன் சம்பந்தன், ஜாலான் லோரோங் ஆ தோங் மற்றும் வாகன நிறுத்துமிடத்தில் 10”x10” சதுர அடியில் அனுமதி வழங்கப் பரிசீலித்து வருவது குறித்துத் தம்மிடம் தெரிவியப்படுத்தப்பட்டதாக டத்தோ மலர்விழி குணசீலன் குறிப்பிட்டார்.
மாநகர் மன்றத்திடம் இன்று தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டவர்களிடம் பேசிய போது அனுமதிக் கடிதம் இன்று வெளியாகும் என்று தம்மிடம் கூறியதாக டத்தோ மலர்விழி குணசீலன் கூறினார்.
கேட்க வேண்டியவர்கள் கேட்காமல் போனாலும் புலியை முறத்தால் விரட்டியடித்தத் தமிழ்ப் பெண்களைப் போல் விறுகொண்டு துணிச்சலாக லைசென்ஸ் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் சந்தையைப் போடப் போகிறோம் என வீர முழக்கமிட்ட நமது இந்திய சகோதரிகள், களத்தில் இறங்கி உறுதியளித்தப் பிரதமர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசியல் செயலாளர், டத்தோ அஸ்மான் அபிடினின் அதிகாரிகள், டத்தோ பண்டார் டத்தோ கமாருஷாமான், மாநகர் மன்றத்தின் உயர் அதிகாரிகள், தமிழ் ஊடகங்கள் அனைவருக்கும் தமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக டத்தோ மலர்விழி குணசீலன் கூறினார்.

