இந்தியர்களுக்கு இது சாபக் கேடா? கேட்க நாதி இல்லையா?

மூவின மக்கள் வாழும் மலேசிய திருநாட்டில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்திய சமுதாயத்தை கில்லு கீறையாகவே நடத்தி வருகின்றனர்.

யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் இஷ்டத்திற்கு இந்திய சமுதாயத்தை இழிவுப்படுத்தலாம் என்பது போல் ஆகிவிட்டது நிலைமை.

தீபாவளி இந்தியர்களின் முக்கிய பண்டிகையாகும். அந்நாளில் உலக சுபிட்சத்திற்கு ஒவ்வொரு இந்துக்களின் வீட்டிலும் ஒளி விளக்கு ஏற்றப்படுகிறது.

ஆனால், அந்த புனித பண்டிகை வந்தால் போதும் விளம்பரம் என்ற பேரில் இந்துக்களின் உணர்வை புண்படுத்த சிலர் கிளம்பி விடுகின்றனர்.

இதில் வேடிக்கை என்னவென்றால் ஒவ்வொரு ஆண்டும் இந்திய சமுதாயம் இவ்வாறு இழிவுப்படுத்தப்பட்டு தான் வருகிறது. அதன் பிறகு சம்பந்தப்பட்ட தரப்பினர் மன்னிப்பு கேட்கின்றனர். அதோடு பிரச்சினை முடிந்ததாக அனைவரும் நினைத்துக் கொள்கிறனர்.

இந்த விவகாரம் ஒவ்வொரு ஆண்டும் பூதாகரமாக வெடிக்கத் தான் செய்கிறது. ஆனால் என்ன செய்வது கேட்க நாதி இல்லையே.

இவ்வாண்டு, தீபாவளியை முன்னிட்டு பிரபல கல்வி நிறுவனம் ஒன்று, இந்தியர்களுக்கு வீடு வாடகைக்கு விடப்படாது என்ற பானியில் ஓர் விளம்பர காணொளியை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியது.

அதே போன்று, இந்தியர்கள் நெற்றியில் இடும் புனித குங்குமத்தை அவமதிக்கும் வகையில் மருந்தகம் ஒன்று காணொளி வெளியிட்டுள்ளது.

இந்த காணொளிகளால் ஏற்பட்ட சர்ச்சைக்கு பின்னர் சம்பந்தப்பட்ட தரப்பினர் மன்னிப்பு கேட்டுள்ளனர். இந்திய சமுதாயத்தினரோ பெரிய மனதுடன் மன்னித்து விடுகின்றனர்.

ஆனால், ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற அவமானங்களை
சகித்துக் கொள்ள இந்தியர்களுக்கு என்ன தலையெழுத்தா? சமுதாயத்தை பிரதிநிதிப்பவர்கள் தான் வாயில் பசை ஊற்றி ஒட்டிக் கொண்டுள்ளனர்.

இந்தியர்களை பெரிதும் மதிப்பதாக மேடைகளில் சூளுரைக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இவைகளை கண்டும் காணதது போல் இருப்பது வேதனையளிக்கிறது.

கடந்த பொதுத் தேர்தலில் 85 விழுக்காட்டு இந்தியர்கள் பக்காத்தான் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். மாற்றம் ஏற்படும் என நம்பி வாக்களித்தவர்களுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம் தான்.

பண்டிகை காலங்களில் பெரு நிறுவனங்கள் வெளியிடும் விளம்பர காணொளிக்கென சிறப்பு தணிக்கை பிரிவு உருவாக்கப்பட வேண்டும். பிற இனத்தவர்களின் உணர்வுகள் தொடர்பான அம்சங்கள் காணொளிகளில் இடம் பெற்றிருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் அப்பிரிவு செயல்பட வேண்டும்.

இஸ்ரேல் – பாலஸ்தீன் போர் தொடர்பான காணொளிகள் டிக் டாக்கில் நீக்கப்படுவதாக புகார் பெற்றப்பட்டவுடன் பொங்கி எழுந்து நடவடிக்கை எடுக்கப்படும் என சூளுரைத்த தொடர்பு மற்றும் இலக்கவியல் அமைச்சர் fahmi fadzil உள்நாட்டில் ஏற்படும் இது போன்ற பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இதனிடையே, காலங்காலமாக
தீபாவளிக்கு இரண்டு நாட்கள் பொது விடுமுறை வழங்கப்பட்ட வேண்டும் என்று இந்தியர்கள் அரசாங்கத்திடம் கையெந்தி நிற்கும் நிலை இவ்வாண்டும் தொடர்கிறது.

நாட்டின் மேம்பாட்டிற்காக மாடாய் உழைத்த இந்தியர்களுக்கு இந்த உரிமையை பெற்ற தர கூட நாதி இல்லாமல் போய்விட்டது வெட்கக் கேடாகும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles