ஊடகவியலாளர்கள் மக்களுக்கும் அரசாங்கத்திற்குமான சமூக தூதர்கள் – சிவநேசன் பெருமிதம்!!

ஈப்போ,அக்31:

மக்களுக்கான சிக்கல்களை அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு வருவதும் அவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை தேவைகள் உட்பட எதிர்பார்ப்பு வரை படம் பிடித்து காட்டுவதோடு அரசாங்கத்தின் செயல்பாடுகளையும் திட்டங்களையும் மக்களிடையே கொண்டுச் சேர்க்கும் பெருமைமிகு தூதர்களாகவும் ஊடகவியலாளர்கள் திகழ்கிறார்கள் என்று மாநில ஆட்சிகுழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

ஒருநாட்டின் ஜனநாயகத்தின் முக்கிய அறம் பேசும் களமாக ஊடகம் திகழும் நிலையில் அதன் ஊடகவியலாளர்கள் அறம் நிறைந்தவர்களாகவும் உண்மையான செய்தியை கொண்டுச் சேர்க்கும் களப்பணியாளர்களாகவும் நம்பிக்கை மிகுந்தவர்களாகவும் திகழ்கிறார்கள் என்பதையும் நினைவுறுத்திய அவர் மக்களின் செழிமையுறும் வாழ்விற்காக மட்டுமின்றி மக்களுக்கான அரசாங்கம் அமைவதிலும் ஊடகவியலாளர்களின் பங்களிப்பு பெரும் ஆற்றல் மிகுந்ததாய் அமைந்திருப்பதாகவும் கூறினார்.

பேரா மாநில ஜசெக ஏற்பாட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடான தீபாவளி விருந்தோம்பல் நிகழ்ச்சியில் இவ்வாறு பேசிய சிவநேசன் ஜசெக ஒருபோதும் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்திற்கு தடையாக இருக்காது என்றார்.ஊடகவியலாளர்களை பாதுகாப்பதோடு அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தையும் மதிப்பையும் அளிக்கும் ஒரு கட்சியாக ஜசெக அதன் தொடக்க காலம் தொட்டே இயங்கி வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர் பேரா மாநிலத்தில் அரசாங்கத்தின் வாயிலாக இந்தியச் சமுதாயத்தின் பல்வேறு சிக்கல்கள் களையப்பட்டு வருவதாகவும் 35 ஆண்டுகள் தொடங்கி 45 ஆண்டுகள் வரை கடந்தகாலங்களில் தீர்க்க முடியாமல் கிடப்பில் கிடந்த ஆலயம்,நிலம்,தமிழ்ப்பள்ளி என பல்வேறு நீண்டக்கால பிரச்னைகளுக்கு நடப்பு அரசாங்கம் தீர்வு கண்டிருப்பதாகவும் கூறினார்.

முன்னதாக வரும் தீபாவளிக்கு பேரா மாநிலத்தில் நீண்டக்காலம் நிரந்திர நிலப்பட்டாவிற்காக காத்திருந்த இந்தியர்களுக்கு நிலப்பட்டா வழங்கவிருப்பதாகவும் அவர்களுக்கு இந்த வருட தீபாவளி மறக்கமுடியாத தீபாவளியாக அமையவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.அதுமட்டுமின்றி,இந்தியர்களின் பிரச்னைகளை களைவதில் தாம் தீவிர முனைப்புக் காட்டி வருவதாகவும் கூறிய அவர் மக்களின் பிரச்னைகளை தனது கவனத்திற்கு கொண்டு வருவதில் ஊடகமும் அதன் ஊடகவியலாளர்களும் தனித்துவ பங்கினை ஆற்றுவதாகவும் குறிப்பிட்டார்.

மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடான தீபாவளி விருந்தோம்பலில் பேரா மாநில ஜசெக தலைவர்களும் அமைச்சர்களும் மாநில ஆட்சிகுழு உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.மாநில ஜசெக தலைவரும் ஊராட்ச்சி வீடமைப்புக்காக அமைச்சருமான ஙா கோர் மிங் மற்றும் மனிதவள அமைச்சர் வ.சிவகுமாரும் இந்நிகழ்ச்சியில் கலந்து உரையாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles