
ஈப்போ நவ 8-
மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் சொக்சோ நிறுவனத்தின் சார்பில்
நேற்று பேராக் மாநிலத்தில் இரண்டு நிறுவனங்களுக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி மதிப்பில் 3 சிறுநீரக சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டது
சொக்சோ நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று ஈப்போவில் நடைபெற்ற தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வுக்கு மனிதவள அமைச்சர்
வ. சிவகுமார் தலைமை தாங்கினார்.
பேராக் அறநெறி கல்வி டயாலிசிஸ் அறக்கட்டளை மற்றும் Woh Peng Cheang Seah Moral Improvement Association ஆகியவற்றிற்கு 3 டையாலிசிஸ் இயந்திரங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது.
SOCSO நிறுவனத்தின் மூலம் தனது தொழிலாளர்களுக்கு உதவ மனித வள அமைச்சு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இது பெரிதும் ஆதரவாக இருக்கிறது என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
ஒரு இயந்திரத்தின் விலை 40,000 வெள்ளியாகும். அந்த வகையில் 1 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி மதிப்பில் சொக்சோ நிறுவனம் இந்த மூன்று இயந்திரங்களை வாங்கி பேருதவி புரிந்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.
நேற்று நடைபெற்ற சொக்சோ நிறுவனத்தின் தீபாவளி விழாவில் ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தனித்து வாழும் தாய்மார்களுக்கும் தீபாவளி அன்பளிப்பு வழங்கப்பட்டது.
சொக்சோ நிறுவனத்தின் தலைவர் டத்தோஸ்ரீ சுபாஹான் கமால், தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான், பேராக் மாநில சொக்சோ நிறுவனத்தின் இயக்குநர் மோகன்தாஸ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

