மிகவும் விமரிசையாக நடைபெற்ற சிங்கமுக காளியம்மன் ஆலய தெப்ப திருவிழா!

தெலுக் பகாங், பிப் 25-
நாடு தழுவிய நிலையில் நேற்று மாசி மகத் தெப்பத் திருவிழா நடைபெற்ற வேளையில் பினாங்கு மாநிலத்தில் பிரசித்துப் பெற்று விளங்கும் திருத்தலங்களில் ஒன்றான தெலுக் பஹாங்கில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சிங்கமுகக் காளியம்மன் ஆலயத்தில் தெப்ப திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இவ்வாலயம் 1897-ஆம் ஆண்டு தெலுக் பஹாங் கடற்கரை ஓரத்தில் மீனவர்களால் கட்டப்பட்டுப் பராமரிக்கப்பட்டது.

பின்னாளில் இந்த ஆலயத்தில் மாசி மகத் தெப்பத் திருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடத் தொடங்கியது.

அவ்வகையில் இத்திருவிழா நேற்று பினாங்கு மாநில இந்து அறப்பணி வாரியத்தின் ஆதரவோடு சிறப்பான வகையில் நடைபெற்றது.

1973-ஆம் ஆண்டு காளியம்மன் விக்ரகத்தை ஊர்வலமாகக் கொண்டு செல்வதற்கு அரசாங்க விசைப்படகு பயன்படுத்தப்பட்டது.

பின்னாளில் இரு படகுகளை இணைத்து முழுமையான தெப்பமாக உருவாக்கி இன்றைய காலக்கட்டத்தில் நாடுத் தழுவிய நிலையில் இத்தெப்பத் திருவிழா மிகப் பிரமாண்டமாகக் கொண்டாடப்படுகிறது.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கடற்கரையிலிருந்து சிங்கமுகக் காளியம்மன் ஆலயத்திற்குப் பால் குடத்தை ஏந்திய வண்ணம் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.

மாலையில் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்ப ஊர்வலம் தொடங்கும் போது சிங்கமுகக் காளியம்மனின் திருவருளைப் பெறும் பொருட்டு தங்கள் எண்ணங்கள் நிறைவேற மனமுருகி வேண்டி பக்தர்கள் மிதவை விளக்குகளைக் கடலில் விட்டனர்.

பின்னர் சிங்கமுக காளியம்மன் கடலில் பவனி வந்தது இத்திருவிழாவின் தனிச்சிறப்பாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles