
தமிழ் மொழிக்கு மலேசிய தமிழர்கள் வழங்கும் மரியாதை மற்றும் முன்னுரிமை மெய்சிலிர்க்கச் செய்வதாக கவிப்பேரரசு வைரமுத்து புகழாரம் சூட்டினார்.
தமது படைப்பான மகா கவிதை நூல் மலேசிய கல்விமான்கள், தமிழ் அறிஞர்களின் வாழ்த்துரையோடு நல்ல வரபேற்ப்பு கிடைத்துள்ளது. இந்த விருதளிப்பு விழாவை முன்னெடுத்திருக்கும் மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன் இருவருக்கும் என் நன்றி.
இந்த விருதை நான் பெரிதும் மதிக்கிறேன். பெருந்தமிழ் விருது தமிழ் உலகுக்கு ஒரு மகுடம்.மலேசியத் தமிழர்களுக்கும் மலேசியத் திருநாட்டுக்கும் மலேசிய மக்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழில் செய்யும் ஒவ்வொரு புரட்சிக்கும் சாதனைக்கும் அனைத்துலக ரீதியில் இருந்து அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இதுவொரு உதாரணம் என பெருந்தமிழ் விழாவில் விருது பெற்ற வைரமுத்து கூறினார்.
கிட்டத்தட்ட 52 ஆண்டுகள் தமிழ் துறையில் ஈடுபட்டு அதில் வெற்றி கண்டவர் கவிப்பேரரசு வைரமுத்து என மஇகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் கூறினார்.
அவர் எழுதும் புத்தகங்களில் பல கருத்துகளை முன்வைக்கிறார். இக் கருத்துகள் பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்வோம். பிடிக்கவில்லை என்றால் விலகி நிற்போம்.
இதில் ஏன் தேவையில்லாத பிரச்சினை என்பது தான் என்னுடைய கேள்வியாகும்.அவ்வகையில் கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதை நூல் மிகவும் சிறந்த நூல். அனைவரும் அதைப் படிக்க வேண்டும்.
குறிப்பாக வைரமுத்துவின் தமிழுக்கு ஆற்றிய சேவையை மஇகா தொடர்ந்து அங்கீகரிக்கும் என தெரிவித்தார்.
தமிழுக்காக முன்னெடுக்கப்பட்ட இந்த மாபெரும் விழாவை விமர்சிப்பது தவறான செயலாகும் என மஇகாவின் தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.
மலேசிய தமிழ் இலக்கியக் காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதை நூலுக்கு பெருந்தமிழ் விருது வழங்க வேண்டும் என திட்டமிட்டது.கிட்டத்தட்ட 12 தமிழ் பேரறிஞர்கள் ஆய்வுக்கு பின் இந்த விருதை வழங்க முடிவு செய்தனர்.
ஆனால், இந்த விழாவிற்கு சில தரப்பிடமிருந்து எதிர்ப்புகள் வந்தது. அந்த எதிர்ப்புகளை மீறி இவ்விழா வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது என்றும் அவர் கூறினார்.தலைநகர், புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

