
கோலாலம்பூர் மார்ச் 17-
இந்திய சமுதாயத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய ஒரு மாபெரும் சக்தி கல்வி மட்டுமே என்று ஸ்ரீ முருகன் கல்வியின் துணை இயக்குனர் சுரேந்திரன் கந்தா தெரிவித்தார்.
நமது இந்தியர்கள் பல அரசியல் கட்சியில் இருக்கலாம்.
ஆனால் கல்வி என்று வரும்போது நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும். அப்போதுதான் கல்வியில் நாம் தலைசிறந்து விளங்க முடியும் என்று அவர் சொன்னார்.
எந்த காலத்திலும் நாம் நமது உரிமைகளை விட்டுக் கொடுக்கக் கூடாது.
இப்போது பல உரிமைகளை நாம் இழந்திருக்கிறோம். இந்த உரிமைகளை நாம் மீண்டும் பெற வேண்டும் என்றால் ஒற்றுமையை முக்கியம்.
ஒரு கல்வி கற்ற சமுதாயமாக இந்திய சமுதாயம் விளங்க வேண்டும். அப்போதுதான் நமது பிள்ளைகளின் எதிர்காலம் மிகச் சிறப்பாக இருக்கும் என்றார் அவர்.
இந்திய சமுதாயம் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக 40 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீ ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தை டான்ஸ்ரீ டாக்டர் எம் தம்பிராஜா தொடக்கி வைத்தார்.
ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தில் பயின்ற மாணவர்கள் இன்று தங்களது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொண்டுள்ளனர்.
கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சமுதாயமே தலைசிறந்து விளங்கும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு என அவர் சொன்னார்.
இன்று காலையில் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா பள்ளியில் 2024 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ முருகன் கல்வி நிலையத்தின் மாணவர்கள் பதிவு விழாவுக்கு தலைமை ஏற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.