
கோலாலம்பூர் மார்ச் 20-
கடந்த 3 ஆண்டுகளில் மொத்தம் 3 ஆயிரம் ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் ராஜினாமா
செய்துள்ளனர் என்று ஜசெக செனட்டர் லிங்கேஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு சுகாதார அமைச்சு எழுத்துப் பூர்வமாக பதில் அளித்துள்ளது.
ராஜினாமா செய்வதற்கான காரணங்களில் தனியார் துறை அல்லது பொது பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு பெறுதல், தனிப்பட்ட காரணங்கள் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்வது ஆகியவை அடங்கும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டில், மொத்தம் 768 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து 2022ல் 1,354 பேரும், கடந்த ஆண்டு 924 பேரும் அடங்குவர்.
மொத்த ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளின் சதவீதத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், 2023 இன் எண்ணிக்கை 6.4% ஐ அடைகிறது.
இந்த புள்ளிவிபரங்கள் மிகவும் கவலையளிக்கின்றன.மேலும் நிரந்தரப் பதவிகளுக்கான நியமனங்களுக்காக நீண்டகாலம் காத்திருக்க வேண்டியிருப்பதால் ஒப்பந்த மருத்துவ அலுவலர்கள் விரக்தியடைந்து ராஜினாமா செய்கிறார்களா என்று அவர் கேள்வியை முன் வைத்தார்.
இந்தப் பிரச்சினையை சுகாதார அமைச்சு இன்னும் ஆழமாக ஆராயும் என நம்புகிறேன்.டிசம்பர் 31, 2023 நிலவரப்படி, மலேசியாவில் மொத்தம் 14,511 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
அவர்கள் 6,478 பட்டதாரி மருத்துவ அதிகாரிகள் (ஹவுஸ்மேன்) மற்றும் 8,033 மருத்துவ அலுவலர்களைக் கொண்டுள்ளனர்.2019-2023 ஆம் ஆண்டிலிருந்து நிரந்தர அடிப்படையில் மொத்தம் 9,822 மருத்துவ அதிகாரிகளின் நியமனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டுக்கான திட்டமிடப்பட்ட நிலையில், சுகாதார அமைச்சு சுமார் 6000 ஒப்பந்த மருத்துவ அதிகாரிகளை நிரந்தர பதவிகளுக்கு நியமிக்கும். இது மிகவும் நல்ல செய்தி, இந்த முயற்சிக்கு நான் சுகாதார அமைச்சர் மற்றும் பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று அவர் சொன்னார்.

