இந்திய வணிகர்கள் உயர்வுக்கு புதிய கட்டமைப்பு! கடனுதவிகளை இரட்டிப்பாக்கும் முயற்சியில் டத்தோ ரமணன் தீவிரம்!

கோலாலம்பூர், மார்ச் 24-
இந்திய தொழில்முனைவோர் உயர்வுக்கு வழிவகுக்கும் புதிய கட்டமைப்புகளை உருவாக்கும் படலத்தில் தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் தீவிரம் காட்டி வருகிறார்.

தமது அமைச்சின் கண்காணிப்பில் உள்ள அரசு சார்புடைய (ஜி.எல்.சி) நிதி நிறுவனங்கள் வழி, இந்திய தொழில்முனைவோர்களின் மேம்பாட்டுக்குத் தேவையான நிதி வளங்களை இரட்டிப்பாக்கும் சாத்தியங்களை அவர் ஆராய்ந்து வருகிறார்.

தற்போது தெக்குன் நிதி நிறுவனத்தின் கீழ், இந்திய வணிகர்களுக்கு உதவுவதற்காக வெ.30 மில்லியன் கடனுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ‘ஸ்புமி (SPUMI) எனும் தனிப்பிரிவின் வழி, இந்திய வணிகர்களுக்கு இந்த கடனுதவி பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது. இதன் வழி கிட்டத்தட்ட 1,600 இந்திய வணிகர்கள் பயன் அடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு அரசு பட்ஜெட்டில், வெ.30 மில்லியன் மட்டுமே ‘ஸ்புமி’-க்கு ஒதுக்கப்பட்ட போதிலும், தெக்குன் வெ.11.6 மில்லியன் உள்நிதியைப் பயன்படுத்தவுள்ளதால், இந்திய வணிகர்களுக்காக இப்போது இருக்கின்ற மொத்த ‘ஸ்புமி’ நிதி, வெ.41.6 மில்லியன் ஆகும் என அண்மையில் டத்தோ ரமணன் குறிப்பிட்டிருந்தார்.

இதனிடையே, கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘ஸ்புமி’ பிரிவின் வழி, இதுவரை 28,000க்கும் மேற்பட்ட இந்திய வணிகர்களுக்கு வெ.442.6 மில்லியன் கடனுதவி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள தகவலையும் அவர் மக்களவையில் தெரிவித்திருந்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles