மித்ரா மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் – டத்தோ ரமணன் கோரிக்கை

‘மித்ரா’ எனப்படும் மலேசிய இந்தியர் உருமாற்ற பிரிவை மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என அதன் முன்னாள் சிறப்பு பணிக்குழுத் தலைவர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

இந்நாட்டு இந்தியர்களின் வாழ்வாதார உயர்வுக்கு வித்திடக்கூடிய மித்ரா பிரிவு, சமூகத்தின் அருஞ்சொத்தாகவும் இரும்புக் கரமாகவும் பார்க்கப்படுவதால், அப்பிரிவு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் நேரடி பார்வையில் இயங்க வேண்டும் என இந்திய சமூகத்தினர் பெரிதும் எதிர்பார்ப்பதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

இந்தியச் சமூகத்தினர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்ததால் இன்று ஒற்றுமை அரசாங்கம் உருவாகியிருக்கிறதே தவிர, குறிப்பிட்ட சில அமைச்சர்களால் அல்ல! இவ்விவகாரத்தில் நாம் நியாயமாகவும் தெளிவாகவும் இருக்க வேண்டும். பிரதமர் மீது நம்பிக்கை வைத்ததால்தான் இந்தியச் சமூகத்தினர் கிட்டத்தட்ட 90 விழுக்காடு வாக்குகளை வழங்கியிருக்கின்றனர் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பிரதமர் துறையின் கீழ் செயல்படக்கூடிய பிரிவுகளுக்கு மற்ற அமைச்சுகளை காட்டிலும் கூடுதலான சலுகைகளும் அனுகூலங்களும் கிடைப்பெறும். அதன் செயலாக்கமும் மிக நேர்த்தியாகவும் நேர்மையாகவும் இருக்கும் என்பதால் மித்ரா பிரிவு மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டு வரப்பட வேண்டும் என, இன்று காலை பெர்னாமா தேசிய ஊடக நிறுவனத்துக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தொழில்முனைவோர் மேம்பாடு, கூட்டுறவுத் துறை துணையமைச்சருமான டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் வலியுறுத்திக் கூறினார்.

மித்ரா பிரிவு தொடக்கத்தில் ‘செடிக்’ என அழைக்கப்பட்டது. 2014ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பு, பின்னர் 2018ஆம் ஆண்டில் ஒற்றுமை துறை அமைச்சுக்கு மாற்றப்பட்ட போது, மித்ரா என பெயர் மாற்றம் கண்டது.

கடந்த செப்டம்பர் 2022ஆம் ஆண்டில் மீண்டும் பிரதமர் துறையின் கீழ் இப்பிரிவு கொண்டு வரப்பட்டது. எனினும், கடந்தாண்டு டிசம்பரில் மீண்டும் ஒற்றுமை துறை அமைச்சுக்கு இப்பிரிவு மாற்றப்பட்டு, பிப்ரவரி மாத வாக்கில் அதன் சிறப்பு நடவடிக்கை குழு தலைவராக பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையில், “நான் மித்ரா உள்விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை. ஒற்றுமை துறை அமைச்சரை தவறு சொல்லவும் விரும்பவில்லை. எனினும், நடப்புச் சூழலை பார்க்கும் போது, நாட்டின் பொது அமைதியை நிலைநாட்டவும், குறிப்பாக இந்திய சமூகத்தின் சுபிட்சத்தை பேணிகாக்கவும் நான் மித்ரா விவகாரம் தொட்டுப் பேச உந்திக்கப்பட்டுள்ளேன்” என டத்தோ ரமணன் சொன்னார்.

முன்னதாக, மித்ராவின் தூர நோக்கு செயல்திட்டங்களை உருவாக்குவதற்கு ஏதுவாக, பெமாண்டு எனும் அமைப்பை வைத்து ஆய்வரங்கள் நடத்த ஒற்றுமை துறை அமைச்சு ஏற்பாடு செய்தது குறித்து ஆர்.எஸ்.என்.ராயர் (பி.எச்-ஜெலுத்தோங், வீ.கணபதிராவ் (பி.எச்-கிள்ளான்) ஆகியோர் நாடாளுமன்றத்தில் தங்களின் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

ஏற்கனவே இந்தியச் சமூகத்திற்கு 4 விதமான பெருந்திட்டங்கள் முறையே உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இன்னொரு புதிய திட்டமும் ஆய்வும் தேவை இல்லை என்று தாம் கருதுவதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினரான டத்தோ ரமணன் மேலும் கோடிகாட்டினார்.

“எதற்காக இந்த அமைப்பை நியமித்துள்ளனர்? இது ஒரு பைத்தியக்காரத்தனம்! நாம் பல ஆண்டுகளாக மலேசியாவில் வாழ்ந்து வருகின்றோம். இந்தியர்களின் பிரச்சினைகள் என்னவென்று நமக்கு நன்கு தெரியும். ஆதலால் மீண்டும் ஒரு புதிய ஆய்வு தேவையற்றது” என அவர் சொன்னார்.

இதனிடையே, தாம் கூடிய விரைவில் பிரதமரை சந்த்தித்து, மித்ராவின் தூர நோக்கு இலக்கு குறித்து கலந்துரையாடவிருப்பதாகவும், அப்பிரிவை மீண்டும் பிரதமர் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தையும் தெரியப்படுத்த விருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles