
காளிதாஸ் சுப்ரமணியம்
மா.பவளச்செல்வன்
கோலகுபு பாரு மே 4-
கோலகுபு பாரு தொகுதியில் உள்ள இந்தியர்கள் வெளி நபர்களின் பேச்சை புறக்கணித்துவிட்டு ஒற்றுமை அரசு சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெற செய்யும்படி ம இகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒற்றுமை அரசு சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக் சோக் தாவ் சிறந்த வேட்பாளர்.
கோலகுபு பாரு இந்தியர்கள் இவருக்கு முழு ஆதரவு வழங்க வேண்டும்.
உங்கள் தேவையை பூர்த்தி செய்யக் கூடிய ஒற்றுமை அரசு வேட்பாளரை தேர்வு செய்யுங்கள் என்று கெர்லிங் இரட்டை முனீஸ்வரர் ஆலய சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
பக்கத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ஜசெக வேட்பாளர் பாக் சோக் தாவ் வெற்றி பெற்றதும் இங்குள்ள மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளது.
அதன் அடிப்படையில் இன்று ம.இ.கா. ஜசெகாவுடன் இணைந்து பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாங் சோக் தாவ் அவருக்காக நாங்களும் தேர்தல் பிரச்சாரம் செய்கிறோம்.
இங்குள்ள இந்தியர்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளையும் நாங்கள் அரசாங்கத்தின் பார்வைக்கு கொண்டு செல்வோம்.
ஆகவே இங்குள்ள இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு எங்களுக்கும் இருக்கிறது.
தேர்தல் வெற்றிக்குப் பிறகு இந்தியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாமல் போனால் ம.இ.கா.வையும் இந்தியர்கள் கேள்வி கேட்கலாம் என்றார் அவர்.
ஒற்றுமை அரசாங்க வேட்பாளரை தேர்வு செய்ய தவறினால் அது இங்குள்ள மக்களுக்கு தான் இழப்பு.
ஆகவே வெளி நபர்களின் பேச்சை உதிரி தள்ளிவிட்டு ஒற்றுமை அரசு வேட்பாளரை அமோக வெற்றி பெற செய்யுங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று நடைபெற்ற இரட்டையர் முனீஸ்வரர் ஆலய திருவிழாவில் ம இகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ், உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன், வேட்பாளர் பாக் சோக் தாவ் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.