
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு மே 9
மலேசிய இந்தியர்களின் குடியுரிமை பிரச்சனைகளுக்கு படிப்படியாக தீர்வு காணப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் தெரிவித்தார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் அனைத்து சமூகங்களின் நலனை காக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பிரதமருக்கு போதுமான கால அவகாசங்கள் தேவைப்படுகிறது. ஆனால் இது பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் தான் பிரதமர் இந்திய சமூகத்தை ஓரம் கட்டி விட்டார் என்ற குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது.
இது உண்மை அல்ல. இந்தியர்கள் உட்பட அனைத்து சமூகங்களின் நலனிலும் பிரதமர் அக்கறை செலுத்தி வருகிறார்.
நான் உள்துறை அமைச்சராக பதவி ஏற்ற பின் குடியுரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன்.
இதுவரை 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அடையாள ஆவணப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
இதில் பெரும்பாலானவை இந்தியர்கள் என்று அவர் சொன்னார்.
நேற்று கோலகுபு பாருவில் உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தலைமையில் நடைபெற்ற இந்திய தலைவர்களை சந்தித்து டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் உரையாடினார்.
இந்த கூட்டத்தில் சிலாங்கூர் மாநில கெஅடிலான் இந்திய கவுன்சிலர்கள் மற்றும் கிராம தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர் பாக் சோக் தாவுக்கு முழு ஆதரவு வழங்கும்படி இந்திய சமுதாயத்தை அவர் கேட்டுக் கொண்டார்.

