
காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்
கோலகுபு பாரு மே 9-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று சொன்னவர் களின் கொட்டம் வரும் மே 11 ஆம் தேதியோடு முடிந்து விடும் என்று உலு சிலாங்கூர் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் தெரிவித்தார்.
தேர்தல் நெருங்க நெருங்க ஒரு சில தரப்பினரால் பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த தேர்தலில் கெஅடிலான் கட்சி பிரச்சாரங்களை மேற்கொள்ளவில்லை என்று குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.
இந்த குற்றச்சாட்டில் எந்தவொரு உண்மையும் இல்லை.
காரணம் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகின்றனர் என்று அவர் சொன்னார்.
வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கும் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று ஒரு சில தரப்பினர் கூறி வருகின்றனர்.
அப்படி சொல்பவர்கள் வரும் சனிக்கிழமையோடு காணாமல் போய்விடுவார்கள் என்று அவர் சொன்னார்.
நேற்று சிலாங்கூர் மாநில கெஅடிலான் இந்திய தலைவர்களுடன் நடைபெற்ற சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

