
காளிதாஸ் சுப்ரமணியம்
உலுசிலாங்கூர் மே17-
ம.இ.கா. உலுசிலாங்கூர் தொகுதியை சிலாங்கூர் மாநிலத்திலேயே முன்னுதார தொகுதியாக மாற்றுவதற்கு தன்னால் இயன்ற சேவைகளை வழங்கவிருப்பதாக தொகுதி தலைவர் பதவிக்கு போட்டியிடும் டத்தோ சுரேஷ் தெரிவித்தார்.
எதிர்வரும் 19:5:2024 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை ம.இ.கா. தொகுதி கட்டடத்தில் நடைபெறவிருக்கும் உலுசிலாங்கூர் தொகுதிக்கான தேர்தலில் லாடாங் செரண்டா கிளைத் தலைவரும் இளந்தொழிலதிபருமான டத்தோ சுரேஷ் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். தொகுதியிலுள்ள அனைத்து கிளைத் தலைவர்களின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் தொகுதியின் மேம்பாட்டிற்கு பாடுபடப் போவதாகக் கூறினார்.
தனித்து வாழும் தாய்மார்கள், மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை தேடித் தருவதோடு தொழிற் பயிற்சிகளில் ஈடுபடுவதற்கான வழிமுறைகளை ஏற்பாடுகள் செய்ய திட்டங்கள் கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தொகுதி மக்களுக்கு குறிப்பாக இந்திய சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும் எனும் வேட்கையில் தலைவர் பதவிக்கு களமிறங்கியுள்ள தனக்கு ஆதரவு தரும் படி கிளைத் தலைவர்களைக் கேட்டுக் கொள்வதாக அவர் கூறினார்.
இரண்டாம் எண்ணில் போட்டியிடும் தனக்கும் தனது அணியினருக்கும் வாக்களித்து நல்ல சேவையினை வழங்க வாய்ப்பினை வழங்குமாறு டத்தோ சுரேஷ் கேட்டுக் கொண்டார்.

