
ஈப்போ, மே.20:
இந்நாட்டில் இந்தியர்களின் கல்வி வளர்ச்சிகாக இயங்கும் ஒரே இயக்கம் ஸ்ரீ முருகன் நிலையம் என்றால் மிகையாகாது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல ஆயிரக்கணக்கில் இந்திய பட்டதாரிகளை உருவாக்கிய பெருமை இவர்களையே சாரும்.
இந்நாட்டில் இந்திய சமூகம் முன்னேற வேண்டுமென்றால் கல்வியில் மேம்பாடு காண வேண்டும் என்று உணர்த்தியவர் டான்ஸ்ரீ டாக்டர் எம்.தம்பிராஜா என்று தம் பாராட்டை இங்குள்ள மையத்தில் நடைபெற்ற கல்வி புரட்சி நிகழ்வை தொடக்கி வைத்தபோது மகப்பேறு மருத்துவர் டாக்டர் வ.ஜெயபாலன் கூறினார்.
புரட்சிக்கும் மாற்றத்திற்கும் வேறுபாடு உண்டு. குறிப்பாக புரட்சி என்பது உங்களிடமிருந்து உருவாகும் தன்மையை கொண்டது. மாற்றம் என்பது மேலிடத்திலிருந்து அல்லது தலைவர்களிடமிருந்து கொண்டுவரப்பட வேண்டிய நிலைப்பாட்டை கொண்டது. அதனால் இந்த கல்வி புரட்சி மாணவர்களின் ஆழ் மனதிலிருந்து உருவாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இதனை செயல்வடிவில் கொண்டு வருகின்றனர் என்று அவர் புலப்படுத்தினார்.
இந்த ஸ்ரீ முருகன் நிலையத்தில் படித்த மாணவர்கள் இன்றும் அரசாங்க துறைகளில் தூதராகவும், அமைச்சுகளின் தலைமை செயலாளராகவும், மருத்துவர், வழக்கறிஞர் மற்றும் பொருளாதாரத் துறையில் தலைசிறந்து மிளிர்வதை காண முடிகிறது. இதற்கு நிகராக மருத்துவர் சோப்ரா நம் கண் முன்னே நிற்கிறார். இங்கு படித்த மாணவர் மருத்துவராக இப்பொழுது காணும் பொழுது பெருமையாக உள்ளது என்று அவர் பாராட்டினார்.
தற்போதைய காலத்தில் சமயம் தெரியாத மருத்துவர்கள் இரும்மல் மற்றும் எம். சி. யை விற்று வருகின் றனர். தாம் செய்யும் தொழிலின் சிறப்பை மற்றும் நம் வழியில் உருவான சமயத்தை கல்வியை காண தவறி வருகின்றனர். சமய பற்று அல்லது வழிபாடு மனதை ஒருவழி்படுத்தும். இதனால், நமது திட்டத்தை நோக்கி முழு கவனத்துடன் சென்று வெற்றி வாகை சூட முடியும் என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
ஸ்ரீ முருகன் நிலையத்தின் புரட்சி, யுத்தம்,, விரதம், யாத்திரை,முக்தி மற்றும் சித்தி என்ற அடைவுநிலை நம் இந்திய மாணவர்கள் கல்வியில் மேம்பாடு காண வழிவகை செய்யும். இந்த அணுகுமுறைகளை அறிமுகம் செய்யும் டான்ஸ்ரீ தம்பிராஜாவின் முயற்சிக்கு நன்றியையும், பாராட்டையும் அவர் தெரிவித்துக் கொண்டார்.
இந்நிகழ்வில், ஸ்ரீ முருகன் நிலையத்தின் துணை இயக்குநர் சுரேன், பேராக் மாநில ஒருங்கிணைப்பாளர்களான டாக்டர் டாக்டர் சேகர் நாராயணன், டாக்டர் மணிராஜன், கே.நாச்சிமுத்து மற்றும் ஒருங் கிணைப்பாளர்கள் பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

