
கிள்ளான்,மே28:
சிலாங்கூர், கிள்ளான் ராஜ மஹாடி இடைநிலைப்பள்ளி மாணவரான க.சத்தீஸ்வரன் எஸ்.பி.எம் தேர்வில் அனைத்து 11 பாடங்களிலும் A நிலை பெற்ற வேளையில் தமிழ்மொழி, தமிழ் இலக்கியம் உள்ளிட்ட 7 பாடங்களில் A+ பெற்று தமக்கும் குடும்பத்திற்கும் தாம் கற்ற பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார். கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவரான இவர், தம் வெற்றிக்கு துணையிருந்த இறைவனுக்கும் அடித்தளமிட்ட அனைத்துநிலை ஆசிரியர்களுக்கும் எல்லா வகையிலும் உற்றத் துணையாக உடனிருந்த ஆதரவளித்த தம் அம்மா திருமதி சுமதி சந்திரன் அவர்களுக்கும் சகோதர, சகோதரிக்கும் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார். தாம் அடைந்த இந்த வெற்றி கடினமான அதேவேளையில் கவனமான உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி எனக் கூறிய மாணவர் சத்தீஸ்வரன் தொடர்ந்து கல்வித்துறையில் மென்மேலும் சிறந்து விளங்க ஆர்வமுடன் செயல்படப் போவதாக உறுதியளித்தார். மாணவருக்கும் நமது வாழ்த்துகள்.

