
இன்று தொடங்கி நாளை மறுநாள் பிற்பகல் வரை விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொள்கிறார் இந்திய பிரதமர் மோடி.
முன்னதாக வேட்டி சட்டை அணிந்து வந்த மோடி, விவேகானந்தரையும், ராமகிருஷ்ண பரமஹம்சரையும் வணங்கினார்.
லோக்சபா தேர்தலுக்கான இறுதிக்கட்ட ஓட்டுப்பதிவு வரும் 1ஆம் தேதியுடன் நிறைவு பெறும் நிலையில், இறுதிக்கட்ட பிரசாரம் நேற்று நிறைவு பெற்றது. இந்நிலையில், 3 நாள் பயணமாக பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்தார். சாலை மார்க்கமாக அரசு விருந்தினர் இல்லம் சென்று ஓய்வு எடுத்தார்.
அங்கிருந்து பகவதி அம்மன் கோயிலுக்கு சென்ற பிரதமர் வழிபாடு நடத்தினார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பகவதி அம்மன் படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து கடற்கரை சென்று, சிறப்பு படகு மூலம் விவேகானந்தர் பாறைக்கு சென்றார். அங்கு தியானத்தை தொடங்கினார்.
நாளை 1ம் தேதி பிற்பகல் வரை தியானம் மேற்கொள்ள உள்ளார்
கன்னியாகுமரிக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்க கட்சி நிர்வாகிகள் யாரும் வர வேண்டாம் என தமிழக பா.ஜ.,வினருக்கு பா.ஜ., மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமரின் தனிப்பட்ட தியான நிகழ்வை, அரசியல் கட்சி நிகழ்வாக மாற்ற வேண்டாம் எனக்கூறியுள்ளது.
இதனிடையே, விருந்தினர் மாளிகைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார். அவருக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனையடுத்து அவர் திரும்பிச் சென்றுவிட்டார்.

