
செப்டம்பர் ஒன்றாம் தேதி அமுல்படுத்தப் படவிருந்த திருத்தம் செய்யப்பட்ட 1955ஆம் ஆண்டு வேலைச் சட்டம், அடுத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதற்கு, ஆள்பல பற்றாக்குறையே காரணம் என மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ M.சரவணன் கூறியிருக்கின்றார்.
பெரும்பாலான நிறுவனங்களில் ஆள்பலப் பற்றாக்குறை பிரச்னை நிலவுகிறது. அந்நிய தொழிலாளர்கள் கூட இம்மாதத்தில் இருந்து தான் மலேசியா வரத் தொடங்கியிருக்கின்றனர். இத்தகையதொரு சூழ்நிலையில் அச்சட்ட அமுலாக்கத்தை ஒத்தி வைக்க முதலாளிகள் தரப்பு முன்வைத்த கோரிக்கை நியாயமாக இருந்ததால்தான் அதற்கு அமைச்சு சம்மதித்ததாக டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
வேலைச் சட்ட அமுலாக்கம் ஒத்தி வைக்கப்படுவது தொடர்பில் MTUC எனும் மலேசிய தொழிற்சங்கக் காங்கிரசுடன் விவாதிக்கப்பட்டுள்ளது. எல்லா தரப்புகளின் கருத்துக்களையும் பரிசீலித்த பின்னரே இதன் தொடர்பில் அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக அமைச்சர் சொன்னார்.
திருத்தம் செய்யப்பட்ட 1955ஆம் ஆண்டு வேலைச் சட்டத்தின் கீழ், ஒரு வாரத்தின் வேலை நேரம் 48 மணி நேரத்தில் இருந்து 45 மணி நேரமாகக் குறைக்கப்பட்டுள்ளது. பிரசவ விடுப்பும் 60 நாட்களில் இருந்து 98 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தந்தையர்களுக்கான விடுமுறை 3 நாட்களில் இருந்து 7 நாட்களாக அதிகரிக்கவும் அச்சட்டத் திருத்தம் வகை செய்கிறது.
இதனிடையே அந்நிய தொழிலாளர்களை வேலைக்கெடுக்க ஆகும் செலவு மிக அதிகமாக இருப்பதாகக் கூறப்படுவதை அமைச்சர் மறுத்துள்ளார். அந்நிய தொழிலாளர்களைத் தருவிக்கும் முதலாளிகள், விமான டிக்கெட், தங்குமிடம் ஆகியவற்றுக்கான செலவுகளை மட்டுமே ஏற்றுக் கொள்கின்றனர். அதோடு அவர்களைத் தருவிக்க அதிகச் செலவாவதாக இதுவரை எந்தவொரு புகாரையும் தமது தரப்பு பெறவில்லை என டத்தோஸ்ரீ சரவணன் விளக்கினார்.