
2024-ஆம் ஆண்டு, ஜூன் 24-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத நாளாக மாறிவிட்டது.
எப்போது, எங்கு என்ன நடக்கும் என நிச்சயமற்ற வாழ்க்கைக்கு மத்தியில், பல்வேறு சிக்கல்கள், நிர்வாகக் குளறுபடிகள், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, கிரிக்கெட் பயிற்சி எடுத்து, டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முன்னேறியதை அந்த தேசத்தின் மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் வெற்றியை வெறுத்து, வங்கதேசத்தின் வெற்றியை உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய அணி, டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து சூப்பர்-8 சுற்றோடு வெளியேறியது.
2022-ஆம் ஆண்டுக்குப்பின் தொடர்ந்து 2-வது முறையாக அரையிறுதிக்குச் செல்லாமல் ஆஸ்திரேலிய அணி வெளியேறியது.
வங்கதேச அணியை வென்றால் ஆப்கானிஸ்தானுக்கு வழிபிறக்கும், ஆப்கானிஸ்தானை வங்கதேசம் வென்றால், ஆஸ்திரேலியாவுக்கு கதவுகள் திறக்கும் என்ற ரீதியில்தான் ஆட்டம் நடந்தது.
வங்கதேசத்தின் வெற்றி அந்த அணிக்கு நலம் பயக்கிறதோ இல்லையோ, ஆஸ்திரேலியா அரையிறுதி செல்ல உதவியாக இருக்கும் என்பதால், ஆஸ்திரேலியா ஆவலோடு காத்திருந்தது.
ஆனால், ஆப்கானிஸ்தான் அணி தனது கட்டுக்கோப்பான பந்துவீச்சு, பீல்டிங்கால் வங்கதேசத்தை வீழ்த்தி, ஆஸ்திரேலியாவின் அரையிறுதிக் கனவை தவிடுபொடியாக்கியது.
இதையடுத்து, 27-ஆம் தேதி காலையில் நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்ரிக்க அணியுடன் ஆப்கானிஸ்தான் மோதுகிறது. அன்று இரவு நடக்கும் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன

