
காளிதாஸ் சுப்ரமணியம்
சுங்கை பக்காப்,
ஜூலை 1 –
அரசாங்கத்தால் வழங்கப்படும் பல சலுகைகள் மற்றும் உதவித் திட்டங்கள் தொடர்பான தவறான, தகவல்களால் மக்கள் இன்னும் குழப்பத்தில் உள்ளனர் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவுத் துறை துணை அமைச்சர் டத்தோ இரமணன் தெரிவித்தார்.
“குறிப்பாக இடைத்தேர்தல் நடைபெறும் பகுதிகளில் நான் சில பகுதிகளுக்குச் செல்லும்போது, வாக்காளர்கள் ஏமாற்றத்தையும், கோபத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்துகிறார்கள்.
ஆனால் நாங்கள் அதை அவர்களுக்கு விளக்கும்போது, அந்த அணுகுமுறை அவர்களுக்கு நிறைய உதவுகிறது,” என்று அவர் கூறினார்.
இந்திய வாக்காளர்களைச் சென்றடைவதற்காக கோலா குபு பாரு (KKB) மாநிலத் தேர்தலின் போது வணக்கம் மடானி திட்டம் தொடங்கப்பட்டது. அது இன்றுவரை தொடர்கிறது என்று அவர் சொன்னார்.
இந்த முயற்சி, இந்திய சமூகத்தில் உள்ள பலர் அரசாங்கத்தின் பல்வேறு அறிவிப்புகளைப் பெறத் தொடங்கியபோது பலனளித்தது.
நாடாளுமன்றக் கூட்டத் தொடருடன் அமைச்சுப் பணிகளில் மும்முரமாக இருந்தாலும், பினாங்கில் சுங்கை பக்காப் இடைத்தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்ய தனக்கு நேரம் கிடைத்ததாகத் தெரிவித்தார்.
“தேர்தல் காலமானாலும் சரி, மற்ற காலங்களிலும் சரி, இந்திய சமூகத்திற்கு பல்வேறு வாய்ப்புகள், பல்வேறு அம்சங்களில் இருந்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் முயற்சிகளைப் பற்றி பரப்புவதற்கும் இந்த முயற்சியைத் தொடருவோம் என்று அவர் சொன்னார்

