ஜொகூர் சட்டமன்றத் தேர்தலில் மலேசிய இந்தியர் மக்கள் கட்சி சார்பில் ஐவர் போட்டி!

ஜோகூர் பாரு, ஜூன் 26-
ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில், மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்.ஐ.பி.பி) தனது தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக களம் இறங்குகிறது.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சின்னத்தில் அக்கட்சி ஐந்து சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக அதன் தலைவர் பி. புனிதன் அறிவித்தார்.

பெரிக்காத்தான் நேஷனல் துணைத் தலைவருமான அவர், இந்தத் தேர்தல் எம்.ஐ.பி.பி-க்கு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் முக்கியமான தருணமாக அமையும் என்றார்.

“முதன் முறையாக தேர்தலில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளோம். இது எங்கள் கட்சியின் வளர்ச்சியையும், பெரிக்காத்தான் நேஷனல் தலைமை எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.

ஜோகூரின் முன்னேற்றத்திற்காக கூட்டணியுடன் இணைந்து செயல்படத் தயாராக இருக்கிறோம்,” என்று வேட்பாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் அவர் தெரிவித்தார்.

எம்.ஐ.பி.பி போட்டியிடும் தொகுதிகளாக புக்கிட் பெர்மாய், பாலோ, கோத்தா இஸ்கந்தார், பெமானிஸ் மற்றும் பெர்மாஸ் ஆகிய ஐந்து தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தொகுதிகளில் முறையே எம். லினா மனோ, டி.எஸ். ஜீவகுமார், எஸ்.எஸ். அன்னா பிரவீனா, டாக்டர் ஏ. அரவிந்த் மற்றும் டி. வேலா ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

வேட்பாளர்கள் அனைவரும் நேர்மை, கல்வித் தகுதி, மக்கள் சேவைக்கான அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவ திறன் ஆகிய அடிப்படைகளில் தேர்வு செய்யப்பட்டதாக புனிதன் கூறினார்.

27 முதல் 41 வயதுக்குள் உள்ள இவர்கள், ஜோகூர் அரசியலில் புதிய தலைமுறையை பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்குள் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் மிகவும் சுமுகமாக நடைபெற்றதாகவும் புனிதன் தெரிவித்தார்.

தேர்தல் இயக்குநர் டத்தோ ஸ்ரீ சனுசி முகமது நோர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனையில் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் முடிவுகளை எட்டியதாக அவர் கூறினார்.

“எந்தவித கருத்து வேறுபாடோ, மோதலோ இல்லாமல் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. அனைத்து கட்சிகளும் ஒரே அணியாக தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டு வருகின்றன,” என்றார்.

மேலும், தேர்தல் பிரசார காலத்தில் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தேர்தல் இயந்திரங்களும் ஒன்றிணைந்து ஒவ்வொரு வேட்பாளருக்கும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதற்கான முன்னேற்பாடாக, போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பெரிக்காத்தான் நேஷனல் கட்சிகளின் பிரிவு தலைவர்கள் மற்றும் தேர்தல் இயந்திரங்களை MIPP வேட்பாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாகவும், தேர்தல் பிரசாரத்தின் இரண்டு வாரங்களிலும் இணைந்து செயல்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் புனிதன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles