
ஈப்போ, ஜூலை 2 – சாலை விபத்தில் 17 வயது மாணவனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட போலீஸ் துறையைச் சேர்ந்த துணை சூப்பிண்டெண்டன் ஒருவர் வழக்கின் விசாரணை முடியும் வரை ஜாமீன் வழங்கக் கோரி நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.
முகமது நஸ்ரி அப்துல் ரசாக் (வயது 44) என்ற அந்த அதிகாரி கடந்த மே 3ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 388வது பிரிவின் கீழ் இந்த விண்ணப்பம் செய்யப்பட்டது என்று அவரது வழக்கறிஞர் ஜேக்கி லோய் யாப் லூங் தெரிவித்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி டத்தோ பூபிந்தர் சிங் குச்சரன் சிங் ப்ரீட்டி முன்றிலையில் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பினரும் தங்கள் வாதங்களைத் தாக்கல் செய்வதற்கு ஏதுவாக அவர் வழக்கை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி மதியம் 12.05 மணி முதல் 12.40 மணிக்குள் ஈப்போ, ஜாத்தி தேசிய பள்ளிக்கு அருகில் உள்ள ஜாலான் தாமான் ஜாத்தி 1இல் 5ஆம் படிவ மாணவரான முகமது ஜஹாரிப் அஃபெண்டி முகமது ஜம்ரியை கொலை செய்ததாக நஸ்ரி மீது குற்றம் சாட்டப்பட்டது.
bernama

