
கோலாலம்பூர்:
இணைய பகடிவதைக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட
ஈஷா என்ற ராஜேஸ்வரி மற்றும் புஷ்பாவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்தாக குற்றத்திற்காக 43 வயதுடைய டுலால் பிரதர்ஸ் எனப்படும் பி.சதீஸ்குமார் மீது இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது.
தனக்கு எதிராக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சித்தி அமினா கசாலி முன்னிலையில் இந்த குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அவர் அமைதியாக காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டுலால் பிரதர்ஸ் 360 என்ற தனது TikTok கணக்கின் மூலம் மற்றவர்களைப் புண்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே ஆபாசமான கருத்துக்களைத் தெரிவித்ததாக அவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் கொண்டுவரப்பட்டுள்ளன
ஜூன் 30 அன்று இரவு 10.12 மணிக்கு செந்தூலில் அவர் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இணைய வசதியைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக தகவல் தொடர்பு, பல்லூடக சட்டத்தின் பிரிவு 233இன் கீழ் இந்த வழக்கு முன்னெடுக்கப்படுகின்றது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஓர் ஆண்டு சிறைத் தண்டனை வரையிலும் 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
29 வயதான ராஜேஸ்வரி கடந்த ஜூலை 5ஆம் தேதி கோலாலம்பூர் ஸ்தாப்பாக்கில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈஷாவிற்கு எதிரான குற்றத்தைப் புரிந்த அதே தேதி, நேரம் மற்றும் இடத்தில் டுலால் பிரதர்ஸ் 360 டிக் டாக் கணக்கு மூலம் ஆர். புஸ்பா என்ற பெண்ணையையும் அவதூறாகவும் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் வகையில் பேசியதாக சதீஸ்குமார் மீது மற்றொரு குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டது.
இவர் 36,000 வெள்ளி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். அனைத்துலக கடைப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஆகஸ்ட் 16-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

