
சென்னை: 2024ஆம் ஆண்டிற்கான பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவிற்கானதா? தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மட்டுமானதா? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அளித்துள்ள 2024ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை கூட்டணிக் கட்சிகளை சமாதானப்படுத்தும் சலுகை அறிவிப்புகளாக மட்டுமே அமைந்துள்ளது வெட்கக்கேடானது.
பீகார், ஆந்திரா என்ற இரண்டு மாநிலங்கள் மட்டும்தான் இந்தியாவில் உள்ளனவா? இதர மாநில மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லையா? அல்லது வரி செலுத்தவில்லையா?
நாட்டிலேயே ஆந்திராவில் மட்டும்தான் பின்தங்கிய மாவட்டங்கள் உள்ளதா? தமிழ்நாட்டில் இல்லையா?
இந்தியாவிலேயே அதிகம் வரிச்செலுத்துவதில் முதன்மையான இடத்தில் உள்ள தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு, முன்னேற்றத்திற்கு எவ்வித சிறப்புத் திட்டத்தையும் கடந்த 11 ஆண்டுகால நிதிநிலை அறிக்கையில் ஒருமுறைகூட பாஜக அரசு அறிவிக்காதது ஏன்?
தமிழ்நாட்டு மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கவில்லை என்பதால் தொடர்ச்சியாகப் பழிவாங்குவதைப் போலவே ஒவ்வொரு பாஜக ஆட்சியின் நிதிநிலை அறிக்கையும் அமைந்துள்ளது என்று அவர் சாடினார்.

