
கோலாலம்பூர், ஜூலை 29-
இந்நாட்டு இந்திய சமூகத்தின் எதிர்காலம் மீது மாட்சிமை தங்கிய மாமன்னர், சுல்தான் இப்ராஹிம் அதிக அக்கறை கொண்டிருக்கிறார் என்று தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் ஓர் அறிக்கை வழி தெரிவித்தார்.
இந்திய சமூகத்தினர் தொடர்பான பிரச்சினைகள் குறித்த நடப்பு நிலவரங்களையும் மாமன்னர் கண்காணித்து வருவதோடு இந்திய சமூகத்தின் பிரச்சினைகளை அவர் நங்கு அறிந்து, புரிந்து வைத்திருக்கின்றார் என சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.
இந்திய சமூகம் தொடர்பான நிகழ்சிகளுக்கும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் எப்போதும் நேரில் சென்று பங்கேற்றுள்ளார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
2023ஆம் ஆண்டு நான் மித்ரா எனப்படும் மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவுக்கான தலைவர் பதவியை ஏற்ற போது மாட்சிமை தங்கிய மாமன்னரை சந்திப்பதற்கான அனுமதி எனக்கு கிடைத்தது.
இந்தச் சந்திப்பு கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடைபெற்றது. ஆலயம், கல்வி, பொருளாதாரம் தொடர்பான பிரச்சினைகள் குறித்தும், இந்திய சமூகம் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் பற்றியும் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தையும் மாமன்னர் பகிர்ந்து கொண்டார்.
மாட்சிமை தங்கிய 17ஆவது மாமன்னரின் அரியணை அமர்ந்த விழாவை முன்னிட்டு வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் இதனைத் தெரிவித்தார்.
ஜோகூர் மாநிலத்தில் இந்திய சமூகத்திற்காக மாமன்னர் தோற்றுவித்த சுல்தான் ரோஹாயா அறக்கட்டளை, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் வறுமையை நீக்குவதிலும் மிக முக்கியப் பங்காற்றுவதாக அவர் சொன்னார்.
மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஆட்சியின் கீழ் நாட்டின் நிலைத்தன்மையும் அடைவு நிலையும் மேலும் சிறப்படையும். மலேசிய இந்திய சமூகம் உட்பட பல இன மக்களின் சுபிட்சமும் மேலும் வளம் பெறும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
நாட்டின் 17ஆவது மாமன்னரான சுல்தான் இப்ராஹிம் அவர்கள் மீது இந்திய சமூகத்தினர் மிக உயர்ந்த நம்பிக்கையை வைத்திருக்கின்றனர் என்றும் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

