
பெட்டாலிங் ஜெயா ஜூலை 29-
புச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளி நில விவகாரத்திற்கு உரிய பதில் இல்லையென்றால் இது தொடர்பில் எம்ஏசிசியில் புகார் செய்யப்படும் என்று கின்ராரா தமிழ்ப்பள்ளி பாதுகாப்பு குழுவினர் கூறினர்.
கடந்த 1946ஆம் ஆண்டு முதல் கின்ராரா தமிழ்ப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
பல பரிணாமங்களுக்கு மத்தியில் இப் பள்ளி செயல்பட்டு வருகிறது. தற்போது இப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளிக்கு அருகே மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இக்குடியிருப்பு பகுதிக்கு செல்லும் நோக்கில் நான்கு வழிகள் கொண்ட சாலை அமைக்கப்படவுள்ளது.
இதனால் தமிழ்ப்பள்ளிக்கு சொந்தமான நிலத்தில் மேம்பாட்டு நிறுவனமும் கோலாலம்பூர் மாநகர் மன்றமும் கைவைக்கத் துடிக்கிறது.
மேம்பாட்டுத் திட்டத்தால் தமிழ்ப்பள்ளிக்கு எந்த பாதிப்பு வரக்கூடாது என்பது தான் இப் பாதுகாப்பு குழுவின் நோக்கமாக உள்ளது. ஆனால் பொய்யான தகவலை பரப்புவதாக கூறி எங்கள் மீதே புகார் செய்யப்படுகிறது.
எது எப்படி இருந்தாலும் இப் பிரச்சினையை நாங்கள் விடப்போவது இல்லை என்று தமிழ் பள்ளி பாதுகாப்பு நடவடிக்கை குழுவின் தலைவர் டாக்டர் ஸ்ரீராம் தெரிவித்தார்.

